
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் விளையாடும்போது மேல்வரிசை பேட்டர்கள் ரன்கள் குவிப்பது முக்கியம் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான முதலிரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றன. பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது. இரு அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26 அன்று தொடங்குகிறது.
இந்திய அணியின் மேல்வரிசை பேட்டர்கள் சொதப்பி வருவது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கேஎல் ராகுல் மட்டுமே மேல் வரிசையில் நம்பிக்கையளித்து வருகிறார். ஜெயிஸ்வால் பெர்த் டெஸ்டில் சதமடித்தார். இதன்பிறகு, ஸ்டார்க் வேகத்தில் நடையைக் கட்டி வருகிறார். ஷுப்மன் கில் ஆட்டம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. விராட் கோலி பெர்த் டெஸ்டில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பினாலும், மீண்டும் ஸ்டம்புகளுக்கு வெளியே செல்லும் பந்தைத் தொட்டு ஆட்டமிழந்து வருகிறார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவை நோக்கிச் செல்ல மிக முக்கியப் பங்காக இருந்தது முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜாவின் 77 ரன்கள். பிறகு, பும்ராவும் ஆகாஷ் தீப்பும் கடைசி விக்கெட்டுக்கு சிறப்பாகக் கூட்டணி அமைத்ததால், ஃபாலோ ஆனை தவிர்க்க முடிந்தது. ஃபாலோ ஆன் ஆகியிருந்தால், இந்தியாவின் நிலைமையே வேறு.
நான்காவது டெஸ்டுக்கு முன்பு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திர ஜடேஜா, பேட்டர்கள் ரன்கள் குவிப்பது முக்கியம் எனப் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
"இந்தியாவுக்கு வெளியே விளையாடும்போது, குறிப்பாக ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவில் விளையாடும்போது மேல்வரிசை பேட்டர்கள் ரன்கள் குவிப்பது முக்கியம். அவர்கள் ரன்கள் குவிக்கவில்லை என்றால், நல்ல தொடக்கம் கொடுக்கவில்லை என்றால், நிச்சயமாக அது நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டர்களுக்கு கூடுதல் அழுத்தத்தையும் பொறுப்பையும் கொடுக்கும். மெல்போர்ன் டெஸ்டில் அவர்கள் ரன் எடுப்பார்கள் என நம்புகிறேன்.
ஓர் அணியாக, நாம் செயல்பட வேண்டும். பேட்டிங்கில் அனைவரும் பங்களிப்பைச் செலுத்தினால், அணி சிறப்பாகச் செயல்படும்.
அடுத்த இரு டெஸ்டுகள் சுவாரசியமானவை. ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றாலும் தொடரைத் தக்கவைத்துவிடுவோம். கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் நாங்கள் இங்கே வென்றுள்ளோம். இதுவொரு நல்ல வாய்ப்பு. இது மிக முக்கியமான ஆட்டமாக இருக்கும்.
இந்தியாவுக்கு வெளியே, அணி கடினமான நிலையில் இருக்கும்போது ரன்கள் குவிப்பது நம்பிக்கையைக் கொடுக்கும். மனநிலையில் மாற்றம் இருக்காது. ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும். அணி எனக்குக் கொடுத்த பொறுப்புக்கு ஏற்ப விளையாட வேண்டும்" என்றார் ஜடேஜா.