மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்ANI

இந்திய மகளிர் அணியின் கேப்டனை மாற்ற இதுவே சரியான நேரம்: மிதாலி ராஜ்

கடந்த மூன்று வருடங்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் எந்த முன்னேற்றத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை.
Published on

இந்திய மகளிர் அணியின் கேப்டனை மாற்ற இதுவே சரியான நேரம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள், நியூசிலாந்து, தெ.ஆ. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து, லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டனை மாற்ற இதுவே சரியான நேரம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

மிதாலி ராஜ் பேசியதாவது

இந்திய மகளிர் அணியின் கேப்டனை மாற்ற இதுவே சரியான நேரம். தேர்வாளர்கள் இது குறித்து சிந்தித்தால், ஒரு இளம் கேப்டனை நான் பரிந்துரைப்பேன். இதற்கு மேலும் தாமதித்தால் அடுத்த உலகக் கோப்பை (2025) வந்துவிடும். எனவே, கேப்டனை மாற்ற வேண்டும் என்றால் இப்போதே மாற்ற வேண்டும்.

மந்தனா துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால், ஜெமிமா போன்ற இளம் கேப்டனை நான் பரிந்துரைப்பேன். உலகக் கோப்பையில் அவரது ஆட்டத்தைக் கண்டு வியந்தேன். எப்போதும் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தயார் செய்துகொள்வார்.

கடந்த மூன்று வருடங்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் எந்த முன்னேற்றத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. உலகக் கோப்பையில் நாம் எந்த உயரத்தை அடையவேண்டும் என்று நினைத்தோமோ, அதன் அருகில் கூட செல்லவில்லை.

பெரிய அணிகளை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் தயாராகும் நமது அணி, மற்ற அணிகளை வீழ்த்திய உடனே சோர்வடைந்து விடுகிறது என நினைக்கிறேன்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் மாற்று வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். ஆடவர் அணியால் எப்படி ஒரு பெரிய போட்டியை முடித்தவுடன், மீண்டும் சிறப்பாக செயல்பட முடிகிறது. ஏனென்றால், அவர்கள் மாற்று வீரர்களுக்கு சரியான வாய்ப்பைக் கொடுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in