இங்கிலாந்து தொடருடன் டெஸ்டிலிருந்து ஓய்வு: டிம் சௌதி

385 விக்கெட்டுகளை தாண்டி, டெஸ்டில் அடித்த 93 சிக்ஸர்களுக்காகவும் டிம் சௌதி என்றும் நினைவில் இருப்பார்.
இங்கிலாந்து தொடருடன் டெஸ்டிலிருந்து ஓய்வு: டிம் சௌதி
ANI
1 min read

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி அறிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றால், அதில் விளையாடத் தயாராக இருப்பதாகவும் சௌதி தெரிவித்துள்ளார்.

மார்ச் 2008-ல் இங்கிலாந்துக்கு எதிராக நேபியரில் நடைபெற்ற டெஸ்டில் டிம் சௌதி அறிமுகமானார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இங்கிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணான ஹாமில்டனில் நடைபெறும் டெஸ்டுடன் ஓய்வு பெறுகிறார்.

35 வயது டிம் சௌதி நியூசிலாந்துக்காக 104 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். 385 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரிச்சர்ட் ஹாட்லிக்கு (431) அடுத்து டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிம் சௌதி தான்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து சௌதி இன்னும் முடிவெடுக்கவில்லை. நியூசிலாந்துக்காக 104 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 125 டி20-களில் சௌதி விளையாடியுள்ளார். இதுவரை மொத்தம் 770 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்டில் 300 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகள் மற்றும் டி20யில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஒரே பந்துவீச்சாளர் டிம் சௌதி.

நியூசிலாந்தின் பல்வேறு முக்கியத் தருணங்களில் மிக முக்கியமான பந்துவீச்சாளராக டிம் சௌதி திகழ்ந்துள்ளார்.

"நியூசிலாந்துக்காக விளையாட வேண்டும் என்பது என்னுடையக் கனவு. நியூசிலாந்துக்காக 18 ஆண்டுகள் விளையாடியுள்ளேன் என்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை, கௌரவம்.

என் மனதில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி இடம் உண்டு. இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். அதே அணிக்கு எதிராக எனக்குப் பிடித்தமான மூன்று மைதானங்களில் நடைபெறும் பெரிய டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவது சரியான முடிவாகத் தெரிகிறது" என்றார் டிம் சௌதி.

385 விக்கெட்டுகளை தாண்டி, டெஸ்டில் அடித்த 93 சிக்ஸர்களுக்காகவும் டிம் சௌதி என்றும் நினைவில் இருப்பார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in