ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் 3 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த வீரர், வீராங்கனைகளை ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற பட்டியலில் இணைத்து கௌரவிப்பது வழக்கம்.
இந்நிலையில் இப்பட்டியலில் புதிதாக மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி, தெ.ஆ. அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் மற்றும் இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை நீத்து டேவிட் ஆகியோர் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இப்பட்டியலில் இணைந்த 2-வது இந்திய வீராங்கனை எனும் சாதனையை படைத்துள்ளார் நீத்து டேவிட். முன்னதாக, இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
அலைஸ்டர் குக், 161 டெஸ்டுகளில் 12472 ரன்களும், 92 ஒருநாள் ஆட்டங்களில் 3204 ரன்களும் எடுத்துள்ளார். அவர் ஓய்வு பெற்ற பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 6 இடத்திற்குள் இடம்பெற்றிருந்தார்.
நீத்து டேவிட், இந்திய மகளிர் அணிக்காக 10 டெஸ்டுகளில் 41 விக்கெட்டுகளையும், 97 ஒருநாள் ஆட்டத்தில் 141 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்தியாவுக்காக 100 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை படைத்தார் நீத்து டேவிட். இவர் 1995-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 53 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுவே, இன்று வரை ஒரு இன்னிங்ஸில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது.
ஏபி டிவில்லியர்ஸ், 114 டெஸ்டுகளில் 8765 ரன்களும், 228 ஒருநாள் ஆட்டங்களில் 9577 ரன்களும், 78 டி20-களில் 1672 ரன்களும் எடுத்துள்ளார்.
31 பந்துகளில் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர்களின் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் உள்ளார் ஏபி டிவில்லியர்ஸ்.