இம்பாக்ட் வீரர் விதியால் பலன் உள்ளதா?: மனம் திறந்த எம்எஸ் தோனி!

"இம்பாக்ட் வீரர் விதிமுறை அமல்படுத்தப்பட்டபோது, அந்நேரத்தில் அது உண்மையில் தேவைப்படவில்லை."
இம்பாக்ட் வீரர் விதியால் பலன் உள்ளதா?: மனம் திறந்த எம்எஸ் தோனி!
2 min read

இம்பாக்ட் வீரர் விதிமுறை அமல்படுத்தப்பட்டபோது, அந்நேரத்தில் அது உண்மையில் தேவைப்படவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் கடந்த 2023-ல் இம்பாக்ட் வீரர் விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இம்பாக்ட் வீரர் விதிமுறை என்பது பேட்டிங்கில் ஒரு பந்துவீச்சாளருக்குப் பதில் கூடுதலாக ஒரு பேட்டரை இம்பாக்ட் வீரராகக் களமிறக்கிக் கொள்ளலாம் அல்லது பந்துவீச்சில் ஒரு பேட்டருக்கு பதில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோஹாட்ஸ்டாரில் பேசிய எம்எஸ் தோனி இம்பாக்ட் வீரர் விதி குறித்து பேசியதாவது:

"இம்பாக்ட் வீரர் விதிமுறை அமல்படுத்தப்பட்டபோது, அந்நேரத்தில் அது உண்மையில் தேவைப்படவில்லை. ஒரு வகையில் இது எனக்கு உதவும். அதேசமயம், உதவாமலும் போகும். நான் இன்னும் விக்கெட் கீப்பிங் செய்கிறேன். எனவே, நான் இம்பாக்ட் வீரர் கிடையாது. விளையாட்டில் நான் ஈடுபட்டு இருக்க வேண்டும்.

இம்பாக்ட் வீரர் விதியால் அதிக ரன்கள் எடுக்கும் ஆட்டங்கள் அதிகரித்துவிட்டதாகப் பலர் கூறுகிறார்கள். சூழல்கள் மற்றும் வீரர்களின் சௌகரிய நிலையைப் பொறுத்துதான் அது அதிகரித்திருப்பதாக நான் நம்புகிறேன். கூடுதல் பேட்டர் இருப்பதன் காரணத்தினால் மட்டுமே ரன்கள் குவிக்கப்படுவதில்லை. இது மனநிலை சார்ந்தது தான். கூடுதல் பேட்டர் இருக்கிறார் என்ற நம்பிக்கை அணியிடம் உள்ளது. எனவே, அவர்கள் ஆக்ரோஷமான பாணியில் விளையாடுகிறார்கள். அதற்காகக் கூடுதல் பேட்டர்கள் 4 அல்லது 5 பேர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதல்ல. கூடுதல் பேட்டர்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையைதான் அது தருகிறது. டி20 கிரிக்கெட் இப்படிதான் முன்னேற்றம் அடைந்துள்ளது.

எல்லா அணிகளுக்கு எதிராகவும் நான் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அணி என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறதோ, அதற்கேற்ப பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும். குறிப்பிட்ட ஓர் அணிக்காக எதிராக மட்டும் பெரும் போட்டி என்றெல்லாம் எதுவும் கிடையாது. தனிப்பட்ட முறையில் அல்லது அணி சார்ந்து பெரும் போட்டியாக எந்தவோர் அணியையும் நான் எண்ண மாட்டேன். காரணம், அது நமக்குக் கூடுதல் அழுத்தத்தை தான் கொடுக்கும். இறுதியில், எந்தவோர் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலும் அதே புள்ளிகள் தான் கிடைக்கப்போகின்றன. நம் பார்வை என்றும் ஒரே நிலையில் தான் இருக்க வேண்டும். எல்லா அணிக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை எதிரணி என்பது ஒரு பொருட்டே கிடையாது. வெற்றிதான் முக்கியம். அது மும்பையாக இருந்தாலும் சரி வேறு எந்த அணியாக இருந்தாலும் சரி. ஆனால், அது பேசுபொருளாகதான் செய்யும். இரு அணிகளுக்கு இடையிலான பெரும் போட்டியாக பேசப்படுவது உண்டு. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிக்கு இது நன்று. இரு அணிகளுக்கு இடையே பெரும் போட்டி என்கிற பிம்பத்தை உருவாக்கிவிட்டால், அவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெரிய ஆட்டமாகக் கருதப்படும். அதுகுறித்து பேசலாம். புள்ளிவிவரங்களைக் குறித்து பேசலாம். 2008 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறோம். எனவே, நிறைய புள்ளி விவரங்கள் கிடைக்கும்" என்றார் எம்எஸ் தோனி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in