வருண் சக்ரவர்த்தி ஜெயித்த கதை!

5 மாதங்களுக்கு முன்பு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் விரக்தியில் இருந்த வருண் சக்ரவர்த்தி இன்று இந்திய வெள்ளைப் பந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.
வருண் சக்ரவர்த்தி ஜெயித்த கதை!
ANI
5 min read

டிஎன்பிஎல் போட்டியில் கவனம் பெற்று, ஐபிஎல் நட்சத்திரமாகி, இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடி பிறகு மூன்று வருடங்கள் இந்தியத் தேர்வுக்குழுவால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி, இன்று, இந்திய வெள்ளைப் பந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார். 29 வயதுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தவர் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டவிதம் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகிறது.

தஞ்சாவூரைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, 13 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். 17 வயது வரை விக்கெட் கீப்பர் பேட்டராக இருந்தார். எனினும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுத்துப் போய் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆர்கிடெக்சர் படிப்பில் பட்டம் பெற்றார். கிரிக்கெட்டை விட்டு முழுவதுமாக விலகியிருந்த நேரமது. 5 வருடப் படிப்புக்குப் பிறகு டென்னிஸ் பந்தில் விளையாடி வந்தார். 26 வயதில் பகுதி நேரமாக ஆர்கிடெக்சராக வேலை பார்த்த வருண், ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தார். அப்போது, வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முழங்கால் காயம் காரணமாகச் சுழற்பந்து வீச்சுக்கு மாறினார். வெகுவிரைவில் மர்மப்பந்துவீச்சைக் கொண்டவராகப் பெயர் பெற்றார். ஆஃப் பிரேக், லெக் பிரேக், கூக்ளி, கேரம்பால், ஃபிளிப்பர், டாப்ஸ்பின்னர், ஸ்லைடர் என பலவிதமான பந்துவீச்சு முறைகளில் தேர்ச்சியடைந்தார். விஷ்ணு விஷால் நடித்த ஜீவா படத்தில் சிறிய வேடத்தில் முகத்தைக் காட்டினார் வருண்.

டிஎன்பிஎல் போட்டியில் அதற்கு முந்தைய இரு வருடங்களில் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாத மதுரை பேந்தர்ஸ் அணி, 2018 டிஎன்பிஎல் போட்டியையே வென்று சாம்பியன் ஆனதில் வருணின் பங்களிப்பு வெளியே தெரிய வந்தது. டிஎன்பிஎல் வர்ணனையாளராக இருந்த மைக் ஹஸ்ஸி, மதுரை அணி வீரரான வருணின் திறமையைப் பாராட்டினார். சிஎஸ்கே, கேகேஆர், மும்பை அணிகள் வலைப்பயிற்சிக்கு வருணை அழைத்தன. மெல்ல மெல்ல கிரிக்கெட் விளையாடுவதை முழு நேரத் தொழிலாக மாற்றினார் வருண்.

2018-ல் விஜய் ஹசாரே கோப்பை, ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்காக அறிமுகம் ஆனார்.

2019 ஐபிஎல் போட்டிக்கான ஐபிஎல் ஏலத்தில் 27 வயது வருணின் அடிப்படை விலை ரூ. 20 லட்சம். டிஎன்பிஎல்-லில் கவனம் ஈர்த்ததால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரைக் கடும் போட்டிக்கு மத்தியில் ரூ. 8.4 கோடிக்குத் தேர்வு செய்தது. அந்த வருட ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். ஆனால் காயம் காரணமாக அந்த வருட ஐபிஎல்-லில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். வருணின் முதல் ஓவரில் சுனில் நரைன் அடித்த 3 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் என 25 ரன்களை வாரி வழங்கி, முதல் ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த ஐபிஎல் அறிமுக வீரர் என்கிற மோசமான சாதனையை வருண் படைத்தார். பிறகு பல மாதங்கள் உள்ளூர் போட்டிகள் எதிலும் விளையாடாமல் இருந்த வருணை, 2020 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்தது கேகேஆர் அணி. வருண் தான் வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்து தேர்வு செய்தார் தினேஷ் கார்த்திக்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2020 ஐபிஎல் போட்டியில் 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகள் எடுத்தார் வருண். தோனியை இருமுறை போல்ட் செய்தார். இதனால் 2020 அக்டோபரில் ஆஸ்திரேலியா செல்லவிருந்த இந்திய டி20 அணிக்கு வருண் தேர்வானார். வாழ்க்கை தான் எத்தகைய வினோத அனுபவங்களைத் தருகிறது! ஆனால் தோள்பட்டைக் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகினார். இவருக்குப் பதிலாக மற்றொரு தமிழக வீரர் நடராஜன், ஆஸி. தொடருக்குத் தேர்வாகி வரலாறு படைத்தார். இதற்குப் பிறகு கொரோனா பயம் நிலவிய அச்சூழலில் தனது காதலி நேஹாவைத் திருமணம் செய்துகொண்டார் வருண். 2021 ஆரம்பத்தில் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முதலில் தேர்வான வருண், உடற்தகுதியை நிரூபிக்காததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2-வது ஏமாற்றம் இது. உடற்தகுதியில் கோலி தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக இருந்த காலக்கட்டமது. 2021 ஐபிஎல்-லில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வருண், 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற டி20 தொடருக்கு வருண் தேர்வானார். இந்தமுறை உடற்தகுதி பிரச்னை எதுவும் இல்லாமல் 3 ஆட்டங்களிலும் விளையாடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். எனினும் அவருடைய மர்மப் பந்துவீச்சுக்காக 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்குத் தேர்வானார். நம்மாலேயே அவருடைய பந்துவீச்சை விளையாட முடியாதபோது பேட்டர்கள் எப்படி விளையாடுவார்கள்? உலகுக்கு வருணின் திறமைகள் தெரியாது என்று சஹாலை ஒதுக்கிவிட்டு வருணைத் தேர்வு செய்ததற்கு விளக்கம் அளித்தார் அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா.

சைட் ஸ்பின், கேரம் பந்துகளால் மர்மமான பந்துவீச்சைக் கொண்டவர் என்கிற பெயரைப் பெற்றிருந்த வருண், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு விக்கெட்டும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். இந்திய அணியும் அப்போட்டியில் மோசமாக விளையாடியது. முதல் 6 சர்வதேச டி20களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார் வருண். அப்போது இந்திய அணி பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி, வருண் பதற்றத்துடன் காணப்பட்டார் என்று அவருடைய மோசமானப் பங்களிப்புக்கு விளக்கம் அளித்தார். 2022 ஐபிஎல் போட்டியில் இன்னும் மோசமாக விளையாடி 11 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இதனால் இந்திய அணி சிறிது காலத்துக்கு அவர் பக்கம் திரும்பவேயில்லை. சுமாரான உடற்தகுதி, பேட்டிங், ஃபீல்டிங் திறமைகள் இல்லாதது, வயது, பந்துவீச்சின் மர்மங்களை எதிரணிகள் எளிதாகக் கணித்தது போன்ற அம்சங்கள் வருணுக்கு எதிராகத் திரும்பின.

வருண் ஓயவில்லை. ஜிம்மில் அதிக நேரம் செலவழித்தார். தனது பந்துவீச்சு முறையை சற்றே மாற்றிக் காட்டினார். லெக் பிரேக் பந்தை இன்னும் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக வீசக் கற்றுக்கொண்டார். முதலில் ஐபிஎல்-லில் ஜோராகப் பந்துவீசினார். ஐபிஎல் 2023, 2024 போட்டிகளில் மொத்தமாக அதிக விக்கெட்டுகள் அதாவது 28 இன்னிங்ஸில் 41 விக்கெட்டுகள் எடுத்து தன்னை மீண்டும் நிலைநிறுத்தினார். இதனால் கடந்த வருட டி20 உலகக் கோப்பைக்கே தேர்வாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 15 பேர் அணியில் வருணுக்கு இடமளிப்பது சிரமம் என்பதால் அதில் தேர்வாகாததைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்திய அணியின் வெற்றிகரமான டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஐபிஎல் 2024 போட்டியில் நன்கு விளையாடிய அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்ற 2-ம் கட்ட இந்திய அணியிலும் வருணுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியின் உச்சத்துக்கே அவர் சென்றார். ஐபிஎல் 2024 போட்டியில் 15 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் 2-வது இடம் பிடித்தும் ஐபிஎல் கோப்பையை கேகேஆர் வெல்ல முக்கியப் பங்களித்தும் இந்நிலை. ஐபிஎல் 2023 போட்டியிலும் சிறப்பாகப் பந்துவீசி 14 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டிலும் அவர் எகானமி 8.14 (2023), 8.04 (2024).

இதையடுத்து, எனக்கு ஒரு மக்கள் தொடர்பு நிறுவனம் இருந்திருக்கலாம் என்றும் கடவுளே, என்னால் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் அமைதியையும், என்னால் முடிந்ததை மாற்றுவதற்கான தைரியத்தையும், வித்தியாசத்தை அறியும் ஞானத்தையும் எனக்குக் கொடு என்றும் பதிவு எழுதி தனது வேதனையை உலகுக்கு உணர்த்தினார்.

கெளதம் கம்பீர் பயிற்சியாளர் ஆன பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஐபிஎல்-லில் சிறப்பாகப் பந்துவீசி வரும் வருணை எப்படித் தேர்வு செய்யாமல் இருக்கலாம் என அவர் கேள்வி எழுப்பியதாகத் தகவல் வெளியானது. வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வானார் வருண். 3 வருடங்களுக்குப் பிறகு அவர் மிகவும் ஆசைப்பட்ட இந்திய அணியின் சீருடையை மீண்டும் அணிந்தார். இம்முறை முன்பை விடவும் விதவிதமாகப் பந்துவீசிய வருணின் பந்துகளை எதிர்கொள்ளத் தடுமாறினார்கள் வங்கதேச வீரர்கள். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி, இது என் மறுபிறப்பு என்று சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் (5) எடுத்தவர் வருண் தான்.

ஒவ்வொருமுறை இந்திய அணி அறிவிக்கப்படும்போதும் என் பெயர் ஏன் இடம்பெறவில்லை என ஏமாற்றம் அடைவேன். அதுதான் என்னை ஊக்கப்படுத்தியது. இப்படியே விட்டுவிடக்கூடாது என என் நிலையை சவாலாக மாற்றினேன். நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடி என் திறமையை மேம்படுத்தினேன். அதெல்லாம் சின்னப் போட்டிகள் என நான் நினைத்ததே இல்லை என்று பேட்டியளித்தார் வருண். சைட் ஸ்பின் பந்துவீச்சாளராக இருந்த நான், ஓவர் ஸ்பின் பந்துவீச்சாளராக மாறிவிட்டேன். இந்த மாற்றம் கொண்டு வர எனக்கு இரு வருடங்கள் ஆயின. டிஎன்பிஎல், விஜய் ஹசாரே, ஐபிஎல்-லில் எனது பந்துவீச்சு மாற்றத்தைப் பரிசோதித்துப் பார்த்தேன். சர்வதேச அளவில் சைட் ஸ்பின் மட்டுமே பத்தாது என்பதைப் புரிந்துகொண்டேன் என்று தனது தலைகீழ் மாற்றத்துக்கான காரணங்களை அடுக்கினார். இந்திய அணியில் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர் எனப் பலமான போட்டி இருந்தபோதும் வயது போன்ற பல பலவீனங்கள் வருணுக்கு இருந்தபோதும் அவர் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் இருந்தார்.

பந்தைச் சுழலச் செய்வதன் மூலம் பேட்டர்களைத் தடுமாறச் செய்வதற்குப் பதிலாக பந்தின் வேகம், நீளம், டிப் எனப்படும் பந்தின் சரிவு போன்ற நுணுக்கங்களில் கவனம் செலுத்தினார். ஓவர்ஸ்பின்னில் பந்துகள் நல்ல உயரத்தில் வந்தன. சுழலவும் செய்தன. இதனால் வருணின் புதுவிதமான பந்துவீச்சைக் கண்டு பேட்டர்கள் மிரள ஆரம்பித்தார்கள். விக்கெட்டுகள் வருணின் மடியில் வந்து விழுந்தன.

தென்னாப்பிரிக்காவில் நம்பமுடியாத அளவுக்குப் பந்துவீச்சினார் வருண். கொத்து கொத்தாக தென்னாப்பிரிக்க பேட்டர்களின் விக்கெட்டுகளை எடுத்தார். 2-வது டி20யில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். 4 பேர் கிளீன் போல்ட் ஆனார்கள். அன்று அவருடைய மகனின் 2-வது பிறந்தநாள் என்பது கூடுதல் கொண்டாட்டமாக அமைந்தது. 3-1 என இந்தியா வென்ற அந்த டி20 தொடரிலும் 12 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்தார் வருண். டி20 ஆட்டத்தில் 30, 40 ரன்கள் கொடுத்தாலும் பரவாயில்லை. விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய் என்கிற கம்பீரின் அறிவுரைகள் வருணுக்கு நம்பிக்கையை அளித்தன. தன்னுடைய நோக்கம் இதுதான் என்பதில் தெளிவு வந்தது.

தென்னாப்பிரிக்கத் தொடருக்கு அடுத்ததாக இங்கிலாந்துடனான டி20 தொடரில் சேர்க்கப்பட்ட வருண், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்று கலக்கினார். ஹாரி புரூக்கை மட்டும் மூன்று ஆட்டங்களில் வீழ்த்தினார். ராஜ்கோட் டி20யில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரையா மூன்று வருடங்கள் ஒதுக்கினார்கள் என்று ஆச்சர்யப்படும் அளவுக்குத் தான் ஒவ்வொரு தொடரிலும் அசத்தினார். வருணின் 2.0 முற்றிலும் புதிதாக உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டு கட்டாக் ஆட்டத்தில் விளையாடி ஒரு விக்கெட்டை எடுத்தார் வருண். 33 வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான 2-வது வயதான வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.

முதல் 6 சர்வதேச டி20களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த வருண், அடுத்த 12 சர்வதேச டி20களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்க, இங்கிலாந்து பேட்டர்கள் வருணின் பந்தில் சிக்ஸரோ பவுண்டரியோ அடித்தால் அடுத்தப் பந்தில் உடனே விக்கெட்டுகள் எடுப்பதையும் வழக்கப்படுத்தினார். சிக்ஸர் அடித்தால் அடுத்தப் பந்தை தற்காப்பு கருதி வீசாமல் விக்கெட் எடுக்கும் அதே முனைப்பில் வீசினார். இதனால் அவருடைய ஓவர்களைக் காண ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டது.

இன்றைய தேதியில் இந்தியாவின் நெ.1 சுழற்பந்துவீச்சாளராக உயர்ந்துள்ள வருண் சக்ரவர்த்தி, ஒரே ஒரு ஒருநாள் ஆட்டத்தில் மட்டும் விளையாடி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். வருணுக்காக ஜெயிஸ்வால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் விரக்தியில் இருந்த வருண் சக்ரவர்த்தி இன்று இந்திய வெள்ளைப் பந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். கொடுக்கப்படும் வாய்ப்புகளையெல்லாம் மிகச்சரியாகப் பயன்படுத்தினால் எந்தவொரு சரிவையும் சரிசெய்ய முடியும், உயரத்தை அடைய முடியும் என்பது வருண் சக்ரவர்த்தியின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in