
கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ இணையருக்கு மும்பை குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
யுஸ்வேந்திர சஹல் ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து, விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
யுஸ்வேந்திர சஹல் - தனஸ்ரீ வெர்மாவுக்கு 2020 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 5 அன்று குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் இணைந்து மனுத் தாக்கல் செய்தார்கள். தங்களுடைய மனுவில் ஜூன் 2022 முதல் இருவரும் பிரிந்து வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹிந்து திருமணச் சட்டப்படி இணையர்கள் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தால், விவாகரத்து வழங்குவதற்கு 6 மாதங்கள் காத்திருப்புக் காலம் என்று ஒரு விதி உள்ளது. மனமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு ஒரு விதி உள்ளது.
யுஸ்வேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ வெர்மாவின் காத்திருப்புக் காலத்தை ரத்து செய்ய முடியாது என குடும்ப நீதிமன்றம் பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இருவரும் கூட்டாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், காத்திருப்புக் காலத்தைத் தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
மேலும், யுஸ்வேந்திர சஹல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதால், ஐபிஎல் போட்டி தொடங்கிய பிறகு அவரால் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடியாது என்பதையும் கருத்தில் கொண்டு இருவருடைய விவாகரத்து குறித்து வியாழக்கிழமை முடிவெடுக்க வேண்டும் என குடும்ப நீதிமன்றத்தை மும்பை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், மும்பை குடும்ப நீதிமன்றத்துக்கு யுஸ்வேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ வருகை தந்தார்கள். இருவருக்கும் விவாகரத்து வழங்கி குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
யுஸ்வேந்திர சஹல் தரப்பு வழக்கறிஞர் நிதின் குமார் குப்தா விவாகரத்து தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், "நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. இரு தரப்பும் கூட்டாகத் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இருவரும் இனி கணவன், மனைவி கிடையாது" என்றார்.