உலகக் கோப்பை நாயகி: யார் இந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்? | Jemimah Rodrigues |

"அன்று முடிவு செய்தேன், இந்தியாவுக்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டுமென்று."
The journey of Jemimah Rodrigues
ஜெமிமா ரோட்ரிக்ஸ்படம்: https://www.instagram.com/jemimahrodrigues/
5 min read

ஹாக்கி பேட்டை பிடித்த கைகள்.... கிட்டாரை பிடித்த கைகள்... பாடல்கள் பாட மைக்கைப் பிடித்த கைகள்....

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் கிரிக்கெட் பேட்டைப் பிடித்து, அசாத்தியமான ஒன்றை சாத்தியப்படுத்தி சாதனை படைத்திருக்கிறது...

ஆம், அது ஜெமிமாவின் கைகள் தான்.....

பறிபோன தந்தையின் கனவு

இந்திய மண்ணில் பிறந்து கிரிக்கெட்டில் சாதிப்பவர்களின் பின்னணியைப் பார்த்தால், ஒரு தந்தையின் தியாகம் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது கோடிக்கணக்கானவர்களின் கனவு, லட்சியம், இலக்கு. இந்தக் கனவை அடைய முடியாத பலர் தங்களுடைய பிள்ளைகளை கிரிக்கெட்டில் பெரிய உயரத்துக்கு அழைத்துச் சென்று சாதிக்க வைத்திருக்கிறார்கள், சாதிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல தந்தைகள் தன் பிள்ளைகளைச் சாதிக்க வைக்கக் காத்திருக்கிறார்கள்.

ஜெமிமா ரோட்ரிக்ஸின் கிரிக்கெட் கதையும் இந்தப் புள்ளியிலிருந்து தான் தொடங்குகிறது, ஒரு சிறிய மாற்றத்துடன்.

படம்: https://www.instagram.com/jemimahrodrigues/

இவான் ரோட்ரிக்ஸ் தான் ஜெமிமாவின் தந்தை. இவருக்கு சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம். கிரிக்கெட்டில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் இவருடைய கனவு. ஆனால், இவான் ரோட்ரிக்ஸின் பெற்றோர்கள் இவர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்றே விரும்பியிருக்கிறார்கள். கிரிக்கெட்டுக்கு நிறைய செலவழிக்க வேண்டும், செலவழித்தாலும் வெற்றி எந்தளவுக்கு சாத்தியம் என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்குள் எழுந்திருக்கிறது.

தன்னால் கிரிக்கெட்டில் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியே தன் பிள்ளைகளை கிரிக்கெட்டராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறார் இவான் ரோட்ரிக்ஸ்.

ஆனால், கிரிக்கெட்டுக்கு இவான் ரோட்ரிக்ஸ் முதலில் நம்பியது ஜெமிமாவை அல்ல. அவருடைய இரு மகன்களை. மும்பையில் இவர்கள் பாண்டப் பகுதியில் வசித்து வந்துள்ளார்கள். கிரிக்கெட் பயிற்சிக்காக அங்கிருந்து பாந்த்ரா பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதற்காக அதிகாலை 4 மணியளவில் எழுந்து பயிற்சிக்குக் கிளம்ப வேண்டும். இப்படியாக தனது சகோதரர்களுடன் கிரிக்கெட் பயிற்சிக்குக் கிளம்பி வரத் தொடங்கியவர் தான் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.

ஜெமிமா இயல்பிலேயே மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர். குழந்தைகளுக்கு பார்பி பொம்மை என்றால் கொள்ளைப் பிரியம். ஜெமிமாவுக்கோ அதைக் கண்டாலே ஆகாது. இதன் காரணமாகவே ஜெமிமாவின் பிறந்தநாளுக்கு ஒருமுறை அவருடைய தாத்தா பிளாஸ்டிக் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதுவே அவருடைய முதல் கிரிக்கெட் பேட்.

பயிற்சிக்கு தினந்தோறும் கிளம்பி வருவது சிரமமாக இருந்ததால், ஜெமிமாவுக்கு 7 வயது இருக்கும்போது குடும்பமாக பாந்த்ராவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். ஜெமிமாவுக்கு 8 வயது இருக்கும்போது, கிரிக்கெட் செலக்‌ஷனுக்குச் சென்றிருக்கிறார். இந்த செலக்‌ஷனில் எல்லா வயதினரும் பங்கேற்றிருக்கிறார். ஜெமிமாவுக்கு வயது 8. பங்கெடுத்தவர்களின் மூத்தவருடைய வயது 28.

வேகப்பந்துவீச்சாளர் ஜெமிமா

நினைவில் கொள்ள வேண்டும் ஜெமிமா அப்போது பேட்டர் கிடையாது, வேகப்பந்துவீச்சாளர். தான் வீசிய இரண்டாவது பந்திலேயே பேட்டரை போல்ட் செய்ததால், இவருக்கான கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்தது. மண்டலங்களுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆசாத் மைதானத்தில் ஒருமுறை விளையாடும்போது அரையிறுதியில் ஜெமிமா ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். அப்போது தான் ஜெமிமாவின் பேட்டிங் திறனைக் கண்டிருக்கிறார் அவருடைய தந்தை. அன்று தொடங்கியது தான் ஜெமிமாவின் பேட்டிங் பயணம்.

படம்: https://x.com/JemiRodrigues

ஜெமிமாவின் பயிற்சியாளர்கள் என்று பார்த்தால் இருவர் தான். ஒருவர் அவருடைய தந்தை இவான் ரோட்ரிக்ஸ். மற்றொருவர் பிரஷாந்த் ஷெட்டி. பிரஷாந்த் ஷெட்டி என்பவர் புகழ்பெற்ற பயிற்சியாளர். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இவர் தான் பயிற்சியாளர். எனவே, ஜெமிமா மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் எம்ஐஜி கிளப் எனும் ஒரே கிளப்புக்காக விளையாடியிருக்கிறார்கள்.

ஜெமிமாவுக்கு 9 வயது இருக்கும்போது, அருகிலிருந்த வலைப்பயிற்சியில் விளையாடிக் கொண்டிருந்தவர்களின் பந்து ஜெமிமாவின் தலையைத் தாக்கப் பார்த்தது. இதுபோன்ற சம்பவங்கள் அங்கு நிகழ்வது வழக்கம் என்பதால், அனைவரும் தங்களுடைய கைகளைக் கொண்டு தலையை மறைத்துக்கொள்வது மரபு. அப்போது, அந்தப் பந்து ஜெமிமாவின் கைகளைத் தாக்கியுள்ளது. மிகச் சிறிய வயது என்பதால் ஜெமிமா அழுதிருக்கிறார். எனவே, ஜெமிமா மிகச் சிறியதாக இருப்பதால், அவர் தற்போது பயிற்சிக்கு வருவது சரியாக இருக்காது என்று பயிற்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

பிறகு சிவாஜி பூங்காவில் கேஎம்சிசி அணிக்காக விளையாடும்போது, ஒரு போட்டியில் அரையிறுதியில் எம்ஐஜி அணியை எதிர்கொண்டிருக்கிறார். இவர் விளையாடிய ஒரு கவர் டிரைவை பார்த்த எம்ஐஜி பயிற்சியாளர், ஜெமிமாவை யார் என்று கேட்டிருக்கிறார். இந்த ஆட்டத்துக்குப் பிறகு 12 வயதுக்குட்பட்ட பிரிவில் செலக்‌ஷன் இருப்பதாகவும் அதில் ஜெமிமா தேர்வாகிவிட்டதாகவும் அழைத்திருக்கிறது எம்ஐஜி கிளப். அப்போதிலிருந்து ஜெமிமாவுக்குப் பெரிய ஆதரவாக இருந்திருக்கிறது எம்ஐஜி கிளப்.

சச்சினும் உலகக் கோப்பையும் அளித்த ஊக்கம்

கிரிக்கெட் பயிற்சி, கிரிக்கெட் போட்டி, வீட்டுக்கு வெளியே சகோதரர்களுடன் விளையாடுவது என ஜெமிமாவின் கிரிக்கெட் பயணம் சீராகச் சென்றுகொண்டிருந்தபோது தான், 2011 ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா வென்றது. உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களை நாடே எப்படிக் கொண்டாடியது என்பது எல்லோருக்கும் தெரியும். சச்சினை வாழ்த்துவதற்காக, அவர் அப்போது வசித்து வந்த பாந்த்ரா வீட்டுக்கு வெளியே ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள்.

சச்சின் வீட்டுக்கு அருகில் தான் ஜெமிமாவின் வீடு. உலகக் கோப்பையை வென்று வீட்டுக்குத் திரும்பிய சச்சினை ஏராளமான ரசிகர்களோடு இணைந்து தனது வீட்டு பால்கனியிலிருந்து பார்த்திருக்கிறார் 11 வயது ஜெமிமா. ஓர் உலகக் கோப்பை வெற்றி ரசிகர்களை இந்தளவுக்கு மகிழ்விக்கும் எனில், இந்தியாவுக்காக தான் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் ஜெமிமாவுக்குள் எழுந்துள்ளது.

ஜெமிமா இப்படி தான் கிரிக்கெட்டில் தீவிரமாகப் பயணிக்கத் தொடங்கி படிப்படியாக வெற்றியை அடைந்திருக்கிறார் என்ற எண்ணம் எழலாம். ஆனால், ஹாக்கியிலும் ஜொலித்திருக்கிறார் ஜெமிமா.

ஹாக்கி வீராங்கனை

படம்: https://x.com/JemiRodrigues

அவருக்கு 12 வயது இருக்கும்போது 19 வயதுக்குட்பட்ட மஹாராஷ்டிர ஹாக்கி அணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ் ஜெமிமாவை அழைத்துச் சென்றுள்ளார். விளையாட்டில் வீரர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று பாடம் புகட்டுவதற்காகவே ஜெமிமாவை அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், ஜெமிமாவோ தன்னிடம் பாஸ் செய்த பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் செய்திருக்கிறார். பார்த்த அனைவருக்கும் இது ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறது. யார் இந்தப் பெண் என்று கேட்டு தேர்வு செய்திருக்கிறார்கள். இப்படி தான் 17 வயதுக்குட்பட்ட மஹாராஷ்டிர அணிக்காக ஃபீல்ட் ஹாக்கியில் விளையாடியிருக்கிறார் ஜெமிமா. கிரிக்கெட், ஹாக்கி மட்டுமா ஜெமிமாவின் களம்?? பள்ளியில் கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டிலும் பங்கெடுத்திருக்கிறார்.

2017-ம் ஆண்டு ஜெமிமாவுக்குப் பெரிய உந்துதல். அது ஹாக்கியையும் முழுமையாகக் கைவிடாத காலம். மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. இதில் ஹர்மன்பிரீத் கௌர் 115 பந்துகளில் 171 ரன்கள் விளாசினார்.

1983 உலகக் கோப்பையில் கபில் தேவ் ஏற்படுத்திய தாக்கம் சச்சின் டெண்டுல்கரை உருவாக்கியது. ஹர்மன்பிரீத் கௌரின் இந்த அதிரடி ஜெமிமாவை உருவாக்கியது என்றே சொல்லலாம். தொலைக்காட்சியிலிருந்து இந்த ஆட்டத்தைப் பார்த்த ஜெமிமாவுக்குள் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து இந்தியா திரும்பிய இந்திய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பை அளிக்க மும்பை வீராங்கனைகளுடன் அதிகாலையிலேயே விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றிருக்கிறார். அப்போது தொடங்கிய கிரிக்கெட் பயணம், ஜெமிமா திரும்பிப் பார்க்கவே இல்லை.

ஜெமிமா மீதான புகழ் வெளிச்சம் விழுந்ததும் 2017-ல் தான். சௌராஷ்டிரத்துக்கு எதிரான 50 ஓவர் ஆட்டத்தில் 163 பந்துகளில் 202 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் இரட்டைச் சதம் மட்டுமில்லாமல் சதங்களையும் நொறுக்கியிருக்கிறார். அப்போது அவருடைய வயது 16.

2018-ல் அறிமுகம்

2018 பிப்ரவரியிலேயே இந்திய அணியின் வாய்ப்பு ஜெமிமாவைத் தேடி வந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில் டி20யில் அறிமுகமானார். இதற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கரை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார். சச்சினும் அறிவுரை வழங்கியதோடு, " நீ விளையாடி பார்த்திருக்கிறேன், நன்றாக பேட் செய்கிறாய்" என்று சொல்ல ஜெமிமாவுக்குப் பெரிய உத்வேகமாக அமைந்தது.

படம்: https://x.com/JemiRodrigues

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது அறிமுக டி20 ஆட்டத்திலேயே 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

சர்வதேச கிரிக்கெட் பயணம் அதிரடியுடன் தொடங்கினாலும், இந்திய அணியில் ஜெமிமாவுக்கான வாய்ப்பு ஏற்ற, இறக்கமாகவே இருந்தது. 2022 உலகக் கோப்பையில் தேர்வாகவில்லை. ஜெமிமாவை இது பெரிதும் பாதித்தது.

இசை, கொண்டாட்டம், ரீல்ஸ், கிட்டார், பிராங்க், முகத்தில் என்றும் புன்னகை என ஜெமிமா ஒரு சூப்பர் வுமனாக இருந்தாலும், சர்ச்சைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்கிற ஒரு கட்டத்தில் வாழ்க்கை அவரைக் கொண்டு நிறுத்தியது.

2025 உலகக் கோப்பையில் ஜெமிமா இடம்பெற்றாலும், விளையாடும் லெவனில் இவருக்கான இடம் உறுதியானதாக இல்லை. கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என அணி நிர்வாகம் கருதினால், வெளியே செல்வது ஜெமிமா தான்.

இதன் காரணமாகவே, உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்தே இரவு முழுக்க ஒரே அழுகை தான். ஜெமிமாவின் தாயார், அருந்ததி, ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோர் தான் ஜெமிமாவைத் தேற்றியிருக்கிறார்கள். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் இந்தியா விளையாடியது. இந்த ஆட்டத்தில் ஜெமிமா சேர்க்கப்பட்டார். இதில், மூன்றாவது பேட்டராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் விளாசி இந்திய அணி 340 ரன்கள் எடுக்க உதவினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 5-வது பேட்டராக களமிறங்குவேன் என்று தான் ஜெமிமா நினைத்திருக்கிறார். ஆனால், இந்திய அணியின் பேட்டிங் தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே 3-வது வரிசையில் ஜெமிமாவைக் களமிறக்க முடிவு செய்துள்ளார்கள். மூன்றாவது பேட்டராக களமிறங்கினார். பிறகு, நடந்தவை எல்லாம் வரலாறு.

கோலி சொன்னதும் ஜெமிமா செய்ததும்

படம்: https://x.com/JemiRodrigues

ஜெமிமாவும் ஸ்மிருதி மந்தனாவும் ஒருமுறை நியூசிலாந்தில் வைத்து விராட் கோலியைச் சந்தித்துள்ளார். சுமார் 4 மணி நேரம் பேசியிருக்கிறார்கள். கிரிக்கெட்டை பற்றி பேசியது வெறும் அரை மணி நேரம் தான். அப்போது, "மகளிர் கிரிக்கெட்டை மாற்றக்கூடிய வலிமை உங்கள் இருவருக்கும் உள்ளது" என்று விராட் கோலி சொல்லியிருக்கிறார்.... மேலும், "நீங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்" என்றும் கூறியிருக்கிறார்.

அத்தகைய தாக்கத்தை தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஜெமிமா ஏற்படுத்தியிருக்கிறார். இன்னும் ஓர் ஆட்டம் தான். அதிலும் மேஜிக்கை நிகழ்த்துவார் என்று நம்புவோம்...

Jemimah Rodrigues | Women's World Cup | Women's World Cup 2025 | Team India | IND v AUS |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in