
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்துக்கு முன்பு, இன்று செய்தியாளர்களைச் சந்திக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மறுத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்தது.
ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து விளையாடுவது கேள்விக்குறியாக இருந்த நிலையில், இரு அணிகளும் லீக் சுற்றில் மோதிக் கொண்டன. செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானைச் சுலபமாக வீழ்த்தியது.
ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க இந்திய வீரர்கள் மறுத்துவிட்டார்கள். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு சூர்யகுமார் யாதவ் மற்றும் சல்மான் அலி அகா கைக்குலுக்கிக்கொள்ள வேண்டாம் என ஆட்ட நடுவர் ஆன்டி பைஃகிராப்ட் கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது.
இதைத் தொடர்ந்து, ஆன்டி பைகிராஃப்டை நீக்கக் கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பை பாகிஸ்தான் அணி புறக்கணித்தது.
ஆட்டத்துக்கு முன்பு, வீரர்கள் யாரும் அறிவிப்பு வரும் வரை விடுதியிலிருந்து மைதானத்துக்குப் புறப்பட வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகே, பாகிஸ்தான் அணியை மைதானத்துக்குப் புறப்பட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. இதன் காரணமாக, ஐக்கிய அரபு அமீரத்துக்கு எதிரான ஆட்டம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை சென்றடைந்தார்கள்.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் ஆன்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஐசிசி தரப்பிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சற்று காட்டமாக ஒரு கடிதம் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின. அதில் ஆன்டி பைகிராஃப்ட் பாகிஸ்தான் அணியிடம் நடத்திய உரையாடலை விதிகளை மீறி படம்பிடித்ததாகச் சொல்லி கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், ஆன்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வருத்தத்தை மட்டுமே வெளிப்படுத்தியதாக ஐசிசி கருதுவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தான் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபாயில் செப்டம்பர் 21 அன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கு நடுவராக ஆன்டி பைகிராஃப்டே இறுதி செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி சார்பில் யாரேனும் ஒருவர் இன்று மாலை 6 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் சார்பில் செய்தியாளர் சந்திப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிபடத் தெரியவில்லை.
அதேசமயம், செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து துபாயிலுள்ள ஐசிசி அகாடெமியில் மாலை 6 மணிக்கு மேல் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சிகள் திட்டமிட்டப்படி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(போட்டி நடைபெறும் உள்நாட்டு நேரப்படி)
India v Pakistan | Ind v Pak | Asia Cup T20 | Asia Cup | Asia Cup 2025 | Ind vs Pak | India vs Pakistan |