சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: தமிம் இக்பால்

"கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அணிக்குத் திரும்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். தேர்வுக் குழுவிலும் விவாதங்கள் நடைபெற்றன."
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: தமிம் இக்பால்
ANI
1 min read

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.

தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக அறிவிப்பது இது இரண்டாவது முறை.

வங்கதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாகப் பார்க்கப்படும் தமிம் இக்பால் 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 5,134 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 8,3357 ரன்களும், சர்வதேச டி20யில் 1,758 ரன்களும் எடுத்துள்ளார்.

2023 உலகக் கோப்பைக்கு முன்பு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவருடைய ஓய்வு முடிவில் அப்போதைய வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலையிட்டார். இதன்பிறகு, 24 மணி நேரத்திலேயே ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றார் தமிம் இக்பால்.

எனினும், வங்கதேச அணியில் இவர் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை. இருந்தாலும், சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் தமிம் இக்பால் மீண்டும் இடம்பெறுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவரை அணியில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டன.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியை அறிவிக்க ஜனவரி 12 கடைசி நாள்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் அறிவித்துள்ளார். தனது முடிவு குறித்து வங்கதேச அணியின் தேர்வுக் குழுவிடம் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

"நீண்ட நாள்களாக நான் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கெடுக்காமல் உள்ளேன். இந்த இடைவெளி அப்படியே தொடரட்டும். சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.

கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அணிக்குத் திரும்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். தேர்வுக் குழுவிலும் விவாதங்கள் நடைபெற்றன. என்னை அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்து வருவது நன்றியுணர்வாக உள்ளது. எனினும், நான் என் மனம் சொல்வதைக் கேட்கிறேன்" என்று தமிம் இக்பால் ஓய்வு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in