
பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியின்போது தமிழ்நாட்டு வீராங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பெண்கள் கபடி அணியினர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே இன்று (ஜன.24) கபடி போட்டி நடைபெற்றது. அப்போது அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது ஃபவுல் அட்டாக் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனால், இரு அணியினரும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனை அடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்த நடுவரிடம் முறையிட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது தமிழக வீராங்கனை ஒருவரை நடுவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, இரு அணியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசிக்கொண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதன்பிறகு சம்மந்தப்பட்ட போட்டி ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளதாவது,
`தமிழக வீராங்கனைகள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழ்நாட்டின் கபடி பயிற்சியாளரை கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.
தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, நம் விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும், பஞ்சாபில் இருந்து அவர்களை பத்திரமாக அழைத்து வரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.