
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதில் உலக செஸ் சாம்பியன் ஆன இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இவருக்கு ரூ. 5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சாலைப் பேரணி மூலம் வருகை தந்தார் குகேஷ்.
பாராட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், சென்னை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ. 5 கோடிக்கான காசோலை மேடையில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குகேஷின் பெற்றோர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, அவர்களையும் முதல்வர் சிறப்பித்தார்.
இந்த விழாவில் குகேஷ் பேசியதாவது:
"இளம் உலக செஸ் சாம்பியனாக இங்கு நிற்பதற்கு, அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். செஸ் உலகில் மிகவும் அற்புதமான நகரங்களில் சென்னையும் ஒன்று. தமிழ்நாடு அரசின் ஆதரவு இல்லாமல் இந்தச் சாதனையை அடைந்திருக்க முடியாது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் இல்லாமல் உலக சாம்பியன்ஷிப் பயணம் சாத்தியமாகியிருக்காது" என்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் குகேஷைப் பாராட்டி பேசியது மட்டுமில்லாமல் புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
"செஸ் விளையாட்டைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது என்னவென்றால், இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இப்படி இன்னும் பல திறமை வாய்ந்த சதுரங்க வீரர், வீராங்கனைகளை வளர்த்தெடுக்க, உருவாக்க ஒரு திட்டத்தை இந்த விழாவின் மூலம் நான் அறிவிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கான "Home of Chess" என்ற சிறப்பு அகாடெமி உருவாக்கப்படும்.
குகேஷின் வெற்றி கொடுக்கும் நம்பிக்கை மற்றும் இந்தச் சிறப்பு அகாடமி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இது குகேஷுக்கான பாராட்டு விழா மட்டும் கிடையாது. விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் விழா இது! எதிர்காலத்தில் இந்த மேடையில் உங்களுக்கான பாராட்டு விழாக்கள் நிச்சயம் நடைபெறும்!
வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. பங்கேற்பதுதான் முக்கியம்! பங்கேற்பதே பெரிய வெற்றிதான்! எனவே, போட்டி போடுங்கள், நீங்கள் யார் என்று காட்டுங்கள்! கொரட்டூரில் பிறந்த குகேஷ் இன்று உலகம் போற்றும் சதுரங்க வீரராக வளர்ந்த வரலாறு உங்களுக்கு வழிகாட்டட்டும்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.