பாண்டியா தலைமையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா விளக்கம்

"4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என நான்தான் கேட்டேன். ஆனால் அதற்கான காரணத்தை நான் இப்போது சொல்ல மாட்டேன்".
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா@bcci
1 min read

நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடி உள்ளேன், எனவே பாண்டியா தலைமையில் விளையாடுவதில் எந்த வித்தியாசமும் இல்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் குல்தீப் யாதவ், சஹால், அக்‌ஷர் படேல் மற்றும் ஜடேஜா என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் ரோஹித் சர்மா பேசியதாவது:

“நான் கேப்டனாக இருந்திருக்கிறேன். மீண்டும் கேப்டனாக செயல்படாமலும் இருந்திருக்கிறேன். இதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதேபோல நான் நிறைய கேப்டன்களின் தலைமையிலும் விளையாடி உள்ளேன், எனவே பாண்டியா தலைமையில் விளையாடுவதில் எந்த வித்தியாசமும் இல்லை.

4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என நான்தான் கேட்டேன். ஆனால் அதற்கான காரணத்தை நான் இப்போது சொல்ல மாட்டேன், மே.இ. தீவுகள் சென்றவுடன் சொல்லுவேன்.

துரதிஷ்டவசமாக வாஷிங்டன் சுந்தர் அதிக ஆட்டங்களில் பங்கேற்கவில்லை, அதனால் அவரை தேர்வு செய்யவில்லை. இதைத் தொடர்ந்து அக்‌ஷர் அல்லது அஸ்வினில் ஒருவரை தேர்வு செய்யவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. அக்‌ஷர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார். மிடில் ஓவர்களில் வித்தியாசமாக பந்துவீசக் கூடியவர் அவர், எனவே அவரை தேர்வு செய்தோம்.

அனைவரும் ஐபிஎல்-ல் தங்களது திறமையை வெளிப்படுத்துவது போல உலகக் கோப்பையிலும் செயல்பட வேண்டும் என்பதே எனது ஆசை. துபே ஐபிஎல்-ல் பெரிதாக பந்துவீசவில்லை. இருப்பினும் தேவைப்பட்டால் அவர் பந்துவீசிதான் ஆகவேண்டும்.

நான் இதற்கு முன்பு அமெரிக்காவில் விளையாடியதில்லை. எனவே அங்கு சூழல் எப்படி இருக்கிறதோ அதற்கேற்ப 11 வீரர்களை தேர்வு செய்வோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in