டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் நிலைமை என்ன?

லீக் சுற்றில் இன்னும் 11 ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ளன.
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் நிலைமை என்ன?
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் நிலைமை என்ன?
2 min read

டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் இன்னும் 11 ஆட்டங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய ஒவ்வொரு அணிகளுக்கும் எந்த அளவிற்கு வாய்ப்புள்ளது என்பதைப் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 3 வெற்றிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 11 ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ளன.

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய அணிகள் என்ன செய்ய வேண்டும்?

பாகிஸ்தான்

3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளில் இருக்கும் பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் அயர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அப்படி இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். ஏற்கெனவே அமெரிக்க அணி 4 புள்ளிகளுடன் இருப்பதால், பாகிஸ்தான் அணி வெளியேறும். அமெரிக்க அணி இந்திய அணிக்கு எதிராக தோல்வியடைந்த காரணத்தால், அந்த அணியின் நெட் ரன் ரேட் பாகிஸ்தானை விட குறைந்துள்ளது. இருப்பினும் தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே அமெரிக்க அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும். இரண்டு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டால், அமெரிக்க அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். கனடா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கும் சிறிய வாய்ப்புள்ளது. கனடா அணி இந்திய அணியுடன் பெரிய வெற்றியைப் பெற்று, அயர்லாந்து அணி தனது கடைசி இரு ஆட்டத்திலும் பெரிய வெற்றிகளைப் பெற்றால் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய மூன்று அணிகளும் 4 புள்ளிகளை பெறும். அப்போது ரன்ரேட்டின் அடிப்படையில் ஒரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

இங்கிலாந்து

இங்கிலாந்து அணி ஓமனை 101 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணியின் ரன்ரேட் +3.081 என மாறியது. ஸ்காட்லாந்து அணி 5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று, ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியடைந்தால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால், ஸ்காட்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். இதில் ஏதேனும் ஒரு ஆட்டம் மழையால் ரத்தானாலும் இங்கிலாந்து அணி வெளியேறி, ஸ்காட்லாந்து அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும்.

வங்கதேசம்

வங்கதேச அணி நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. அடுத்த ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றாலே சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். வங்கதேச அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்து (160 ரன்கள் இலக்கில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி), நெதர்லாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் பெரிய வெற்றியைப் பெற்றால் நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். நேபாள் அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்தால் நேபாள் அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in