
ஐசிசி அறிமுகப்படுத்திய புதிய விதியான ஸ்டாப் கிளாக் விதி மூலம் 5 ரன்கள் அபராதம் பெற்ற முதல் அணி என்ற பெயரை பெற்றுள்ளது அமெரிக்க அணி.
டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமெரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மொனாக் படேல் காயத்தால் விலகிய நிலையில் ஜோன்ஸ் கேப்டனாக செயல்பட்டார்.
இந்த ஆட்டத்தில் மூன்று முறை ஒரு ஓவரில் இருந்து அடுத்த ஓவரை வீச அதிக நேரத்தை அமெரிக்க அணி எடுத்துக் கொண்டதால் அந்த அணிக்கு அபராதமாக 5 ரன்கள் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஐசிசி அறிமுகப்படுத்திய புதிய விதியான ஸ்டாப் கிளாக் விதியால் 5 ரன்கள் அபராதம் பெற்ற முதல் அணி என்ற பெயரை பெற்றுள்ளது அமெரிக்க அணி.
ஒரு ஓவர் முடிந்தப்பின் அடுத்த ஓவரை வீச ஒரு நிமிடம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் பந்துவீசக்கூடிய அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும். ஆனால், இது முதல் முறையே வழங்கப்படாது. இரு முறை நடுவர் எச்சரித்த பின்னரும் 3-வது முறையாக தாமதித்தால் அபராதம் வழங்கப்படும்.
நேற்றைய ஆட்டத்தில் அமெரிக்க அணியின் கேப்டன் ஜோன்ஸிடம் நடுவர் இரு முறை தாமதம் ஆவதாக எச்சரித்துள்ளார். மீண்டும் 3-வது முறையும் ஓவருக்கு இடையில் தாமதம் ஆன காரணத்தால், அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இதன் பிறகு 30 பந்துகளில் 30 ரன்கள் என மாறியது. ஆனால், இதனால் ஆட்டத்தில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்று தான் கூறவேண்டும். இந்திய அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி அறிமுகப்படுத்திய புதிய விதியான ஸ்டாப் கிளாக் விதி ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த விதியால் 5 ரன்கள் அபராதம் பெற்ற முதல் அணி என்ற பெயரை பெற்றுள்ளது அமெரிக்க அணி.