டி20 உலகக் கோப்பை: அடுத்தடுத்த ஆட்டங்களில் நியூசிலாந்து, இலங்கை தோல்வி!

கடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபரூக்கி, இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்தை நொறுக்கிய ஆப்கானிஸ்தான் அணி!
நியூசிலாந்தை நொறுக்கிய ஆப்கானிஸ்தான் அணி!@icc

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் கயானாவில் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் அருமையான தொடக்கத்தை அமைத்து தந்தனர். அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கவில்லை என்றாலும் விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு இருவரும் அதிரடியாக விளையாடினர். 13.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. குர்பாஸ் அரைசதம் அடித்தார். 103 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஹென்றி பிரித்தார். ஸ்த்ரான் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஓமர்ஸாய் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த எந்த வீரரும் பெரியளவில் ரன்களை சேர்க்கவில்லை. ஒருபக்கம் குர்பாஸ் மட்டும் தனியாக போராடி ரன்களை சேர்த்தார். 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து குர்பாஸ் போல்ட் பந்தில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுதத்து. போல்ட் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. ஃபின் ஆலனை முதல் பந்தில் ஃபரூக்கி வெளியேற்றினார். இதன் பிறகும் ஃபரூக்கி, ரஷித் கான் மற்றும் நபி பந்துவீச்சில் திணறியது நியூசிலாந்து அணி. கான்வே 8, மிட்செல் 5, வில்லியம்சன் 9, சாப்மேன் 4, பிரேஸ்வெல் 0, கிளென் பிலிப்ஸ் 18 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து அணி. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. ஃபரூக்கி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர், நபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபரூக்கி கடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குர்பாஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். தனது முதல் ஆட்டத்தில் பெரிய தோல்வியைச் சந்திதுள்ளது நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வங்தேசம் - இலங்கை அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிசங்கா 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். தனஞ்ஜெயா டி சில்வா 21, அசலங்கா 19 ரன்கள் எடுத்தனர். வங்தேச அணியில் முஸ்தஃபிஸுர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டெளஹித் ஹிருதாய் 20 பந்துகளில் 40 ரன்களும்,  லிட்டன் தாஸ் 38 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் நுவான் துஷாரா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரிஷாத் ஹொசைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இலங்கை அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in