அசத்திய சூர்யகுமார், பும்ரா: ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்தியா!

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்துடன் ஜூன் 22 அன்று விளையாடவுள்ளது.
ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்தியா!
ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்தியா!ANI
2 min read

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய பெரிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின.

இந்நிலையில் இன்று தனது சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் பார்படோஸில் விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெற்றார்.

இந்திய அணிக்கு மிகவும் மெதுவான தொடக்கம் அமைந்தது. ஒரு பவுண்டரியுடன் ரோஹித் சர்மா 8 ரன்கள் எடுத்து ஃபரூக்கி பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடினார், மறுமுனையில் கோலி பந்துக்கு ஒரு ரன் வீதம் எடுத்துக் கொண்டிருந்தார். ரிஷப் பந்த் 4 பவுண்டரிகளுடன் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்ததாக கோலி 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு துபே 7 ரன்னில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் - ஹார்திக் பாண்டியா கூட்டணி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் சேர்ந்து சராசரியாக ஓவருக்கு 10-12 ரன்களைச் சேர்த்ததால், அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. 10 ஓவர்களில் 79 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் 16.5 ஓவர்களில் 150 ரன்களை அடித்தது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவ் ஃபரூக்கி பந்தில் வெளியேறினார். இதன் பிறகு ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் - ஹார்திக் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. கடைசியில் அக்‌ஷர் படேல் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஃபரூக்கி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. நட்சத்திர வீரர் குர்பாஸ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஸத்ரான் 8, ஹஸரதுல்லா ஸஸாய் 2 ரன்களில் வெளியேற குல்புதின் நைப் - ஓமர்ஸாய் ஜோடி சேர்ந்தனர். 44 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். நைப் 17 ரன்களில் வெளியேற அடுத்ததாக ஓமர்ஸாய் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். மீண்டும் பும்ராவின் ஒரு அற்புதமான பந்தில் நஜிபுல்லா ஸத்ரான் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. இதன் பிறகு நபி 14, ரஷித் கான் 2 ரன்களில் வெளியேற, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த ஆட்டத்தில் ஜூன் 22 அன்று வங்கதேசத்துடன் விளையாடவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in