சென்னை டி20: இந்திய மகளிர் அணி தோல்வி!

அதிரடியாக விளையாடிய பிரிட்ஸ் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்.
12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தெ.ஆ. அணி!
12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தெ.ஆ. அணி!@bcci
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் தெ.ஆ. அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதன் பிறகு நடைபெற்ற டெஸ்டில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தெ.ஆ. அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. வோல்வார்ட் - பிரிட்ஸ் ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. வோல்வார்ட் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு காப், பிரிட்ஸுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.

இந்த கூட்டணி வேகமாக ரன்களை சேர்த்தது. 96 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ராதா யாதவ் பிரித்தார். காப் 33 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பிறகு பிரிட்ஸ் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து பூஜா வஸ்த்ரகர் பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் தெ.ஆ. அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு விளையாடிய இந்திய அணிக்கு மந்தனா அதிரடியான தொடக்கத்தை அமைத்து தந்தார், மறுமுனையில் ஷெஃபாலி வெர்மா 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு மந்தனா 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு இந்திய அணி தடுமாறியது.

ஹர்மன்பிரீத் கௌர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், இந்திய அணியால் 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்த ஆட்டத்தில் தெ.ஆ. அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹர்மன்பிரீத் கௌர் 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெமிமா ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தெ.ஆ. அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டி20 ஆட்டம் நாளை (ஞாயிறு) நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in