
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 4-வது ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது தமிழக அணி.
2024-25 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி கடந்த நவ.23 அன்று தொடங்கியது. இதில் 38 அணிகள் பங்கேற்கின்றன. இவை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அணி இடம்பெற்றுள்ள பிரிவில் திரிபுரா, சிக்கிம், பரோடா, குஜராத், கர்நாடகம், சௌராஷ்டிரம், உத்தரகண்ட் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தனது முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தமிழக அணி அடுத்ததாக தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியடைந்து இப்போட்டியை விட்டு வெளியேறியது.
இந்நிலையில் இன்று 6-வது ஆட்டத்தில் சௌராஷ்டிரம் அணியை எதிர்கொண்ட தமிழக அணி, மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரம் அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் குவிக்க அடுத்து விளையாடிய தமிழக அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பூபதி குமார் 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்த ஆட்டத்தில் தமிழக அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
ஏற்கெனவே இப்போட்டியை விட்டு வெளியேறிய தமிழக அணி, தொடர்ச்சியாக 4-வது ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் உத்தரகண்ட் அணியுடன் டிச. 5 அன்று விளையாடுகிறது தமிழக அணி.