
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் முஹமது சிராஜின் மிரட்டலான பந்துவீச்சில் இந்தியா த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.
5 டெஸ்டுகள் கொண்ட தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களும் இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்து இங்கிலாந்து வெற்றிக்கு 374 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
நான்காவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இலக்கை விரட்டி விளையாடி வந்த இங்கிலாந்து பேட்டிங்கில் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக்கின் 195 ரன்கள் கூட்டணி ஆட்டத்தை அவர்கள் பக்கம் இழுத்துச் சென்றது.
தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து வெற்றிக்கு 57 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் வெற்றியின் விளிம்பில் இருந்தது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவ முன்வந்தது. நீண்ட நேரமாக ரன் குவிக்க திணறி வந்த ஜேக்கப் பெத்தெல் போல்டானார். சதமடித்த ஜோ ரூட் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டம் மீண்டும் சமநிலைக்குத் திரும்பியது.
பந்துக்குப் பந்து பரபரப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. தோள்பட்டை காயம் காரணமாக ஓவல் டெஸ்டிலிருந்து விலகிய கிறிஸ் வோக்ஸ், தேவைப்படும் பட்சத்தில் பேட்டிங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆட்டத்தில் இது கூடுதல் சுவாரஸ்யத்தைக் கூட்டியது.
77-வது ஓவரின்போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பிறகு, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிறகு மைதானத்தில் ஆய்வை மேற்கொண்ட நடுவர்கள், நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்கள்.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பிரசித் கிருஷ்ணா முதல் பந்தை ஷார்ட் ஆஃப் லெங்தில் வீச, ஜேமி ஓவர்டன் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து பேட்டின் உள்பக்க விளிம்பில்பட்டு பவுண்டரிக்கு சென்றது. இங்கிலாந்து வெற்றிக்கு 27 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.
அடுத்த ஓவரை வீச வந்த முஹமது சிராஜ், மிக அற்புதமாகப் பந்துவீசி ஜேமி ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். சிராஜ் வீசிய அழகுக்கு அத்தனை பந்துகளும் விக்கெட்டாக விழுந்திருக்க வேண்டும். அந்தளவுக்கு லைன், லெந்த், ஸ்விங்கில் கலக்கினார்.
தனது அடுத்த ஓவரிலேயே ஜேமி ஓவர்டனையும் எல்பிடபிள்யு செய்தார் சிராஜ். ஆட்டம் விறுவிறுப்பின் உச்சத்துக்கே சென்றது. இங்கிலாந்து வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் கஸ் அட்கின்சன் மற்றும் ஜாஷ் டங் இருந்தார்கள்.
இந்த டெஸ்டிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்ட கிறிஸ் வோக்ஸ் ஒற்றைக் கையில் காயத்துடன் பேட்டிங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
ஜாஷ் டங்குக்கு பெரியளவில் ஸ்டிரைக்கை கொடுக்காமல் அட்கின்சன் பெரும்பாலும் ஸ்டிரைக்கை வைத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும், அவரால் ரன்களை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து வெற்றிக்கு 17 ரன்கள் தேவை என்றபோது, பிரசித் கிருஷ்ணா அட்டகாசமான யார்க்கர் பந்தை வீசி டங்கை போல்ட் செய்து அசத்தினார்.
தோள்பட்டை காயம் காரணமாக, ஒற்றைக் கையில் கட்டுபோன்ற அமைப்புடன் ஒற்றைக் கையில் பேட்டை கொண்டு களமிறங்கினார் கிறிஸ் வோக்ஸ். பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வோக்ஸ் வந்தவுடன் ஒரு சிக்ஸரை அடித்து நெருக்கடியை இந்தியா பக்கம் திருப்பினார் அட்கின்சன். பவுண்டரி எல்லைக் கோட்டுக்கு சற்று முன்பு இருந்ததால், வைட் லாங் ஆனில் இருந்த ஆகாஷ் தீப்பால் இதை கேட்ச் பிடிக்க முடியாமல் சிக்ஸராக மாறியது.
இதே ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவருக்கு ஸ்டிரைக்குக்கு வந்தார் அட்கின்சன். அதுவும் பந்து பேட்டில் படாமல் கீப்பருக்கு சென்றது. துருவ் ஜுரெல் ஸ்டம்புகளை தகர்த்திருந்தால், வோக்ஸ் ரன் அவுட் ஆகியிருந்திருப்பார். ஆனால், வாய்ப்பைத் தவறவிட்டார் ஜுரெல்.
பிரசித் கிருஷ்ணா ஓவரின் முதல் பந்தில் இரு ரன்கள் எடுத்தார் அட்கின்சன். 8 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. கடைசி பந்தில் இந்த முறை பேட்டில் வாங்கிய அட்கின்சன், எளிதாக 1 ரன் எடுத்தார். மீண்டும் அடுத்த ஓவர் ஸ்டிரைக்குக்கு சென்றார் அட்கின்சன்.
ஆனால், சிராஜ் அட்டகாசமான யார்க்கரை வீசி முதல் பந்திலேயே அட்கின்சனை வீழ்த்தி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியைத் தந்தார். 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. இதன்மூலம், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் தோல்வியடைந்திருந்தால், இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்திருக்கும். வெற்றி பெற்றதன் மூலம் 2-2 என தொடரை சமன் செய்துள்ளது இந்தியா.
முஹமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரில் 5 டெஸ்டுகளிலும் முழுமையாக விளையாடிய ஒரே வீரர் சிராஜ் தான். இந்த டெஸ்டில் மட்டும் 9 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் சிராஜ்.
காலத்துக்கும் மறக்க முடியாத வெற்றியை ரசிகர்களுக்கு பரிசாக அளித்திருக்கிறார் முஹமது சிராஜ். டேல் ஸ்டெயின் சொன்னபடி 5 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார் சிராஜ்.
Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Mohammed Siraj | Prasidh Krishna | Oval Test | 5th Test | India England Test Series | India tour of England | Chris Woakes