சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்குச் சுலபமானதா?

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பை: ஜூன் 19 முதல் சூப்பர் 8 சுற்று!
டி20 உலகக் கோப்பை: ஜூன் 19 முதல் சூப்பர் 8 சுற்று!@icc
1 min read

நடப்பு டி20 உலகக் கோப்பையில் 2 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் எவை என்பது உறுதியாகி உள்ளது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய பெரிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், மே.இ. தீவுகள் ஆகிய அணிகள் லீக் சுற்றில் ஒரு தோல்வியையும் சந்திக்கவில்லை. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - மே.இ. தீவுகள் அணிகள் விளையாடவுள்ளது.

இந்நிலையில் சூப்பர் 8 சுற்று ஜூன் 19 முதல் நடைபெறவுள்ளது. தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், தென்னாப்பிரிக்கா, மே.இ. தீவுகள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா விளையாடும் ஆட்டங்கள்:

இந்தியா vs ஆப்கானிஸ்தான் - ஜூன் 20

இந்தியா vs வங்கதேசம் - ஜூன் 22

இந்தியா vs ஆஸ்திரேலியா - ஜூன் 24

2 பிரிவிலும் இடம்பெற்ற ஒவ்வொரு அணியும் தலா 3 ஆட்டங்களில் விளையாடும். புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

கடந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் விளையாடிய நியூசிலாந்தும் பாகிஸ்தானும் இம்முறை முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளன. இதன் காரணமாக யாரும் எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது.

இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் 1 பிரிவில் வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் உள்ளதால் இந்திய அணிக்குச் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரு அணிகளையும் தோற்கடித்தாலே இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். கடினமான அணி என்றால் ஆஸ்திரேலியா தான். அந்த அணியையும் சூப்பர் 8 சுற்றில் கடைசியாகத்தான் எதிர்கொள்கிறது. இதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றை இந்திய அணி சுலபமாகக் கடந்து அரையிறுதிக்குச் செல்லும் என இந்திய ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

ஆனால், ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அதேபோல சூப்பர் 8 சுற்றிலும் ஏதேனும் ஒரு பெரிய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்று சூடுப்பிடிக்கும். எனவே, சூப்பர் 8 சுற்று சுவாரசியம் நிரைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in