இமாலய ஸ்கோர் எடுத்து சன்ரைசர்ஸ் வெற்றி!

ஓர் ஆட்டத்தில் 523 ரன்கள்; 38 சிக்ஸர்கள் - ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை
இமாலய ஸ்கோர் எடுத்து சன்ரைசர்ஸ் வெற்றி!
ANI

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பையில் லுக் வுட்டுக்குப் பதில் க்வெனா மபாக சேர்க்கப்பட்டார். ஹைதராபாதில் மார்கோ யான்சென், நடராஜனுக்குப் பதில் டிராவிஸ் ஹெட், உனாட்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள்.

தொடக்க பேட்டர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். மபாக முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஹெட் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தன. பாண்டியா வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் தவறவிட்டார். மும்பையின் இந்தத் தவறிலிருந்து ஆட்டம் தொடங்கியது.

மபாக வீசிய மூன்றாவது ஓவரில் ஹெட் தலா இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரிகளை விளாசினார். உடனடியாக பும்ராவை அழைத்தார் பாண்டியா. இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே அவர் கொடுத்தார்.

அடுத்த ஓவரில் அகர்வாலை பாண்டியா வீழ்த்தியது, மும்பை செய்த அடுத்தத் தவறாக மாறியது. ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் மும்பை பந்துவீச்சாளர்களைப் புரட்டிப்போட பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தியும் பலனில்லை. சாவ்லா ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார் அபிஷேக்.

ஹெட் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதுவே ஹைதராபாதுக்காக அடிக்கப்பட்ட அதிவேக அரை சதமாக இருந்தது. இவரைத் தொடர்ந்து 16 பந்துகளில் அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா, ஹெட் செய்த சாதனையை 22 நிமிடங்களிலேயே முறியடித்தார்.

ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் 10 ஓவர்களில் அந்த அணி 148 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, பும்ரா மட்டும் ஓரளவுக்கு ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினாலும், மற்ற எந்த பந்துவீச்சாளர்களுக்கும் இன்றைய நாள் எடுபடவில்லை. 15-வது ஓவரிலேயே ஹைதராபாத் 200 ரன்களைக் கடந்தது. கிளாஸென் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

19-வது ஓவரிலேயே ஹைதராபாத் 250 ரன்களை கடந்ததால், ஐபிஎல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல ஷாம்ஸ் முலானி வீசிய கடைசி ஓவரில் கிளாஸென் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளாஸென் 34 பந்துகளில் 80 ரன்களும், மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தார்கள்.

278 ரன்கள் என்ற சாதனை இலக்கை நோக்கி மும்பை தொடக்க பேட்டர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஹித் பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடர்ந்தாலும், 9 ரன்கள் மட்டுமே கிடைத்தன. உனாட்கட் வீசிய 2-வது ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்டரியையும், ரோஹித் இரு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்கள். ஆட்டத்துக்கான சரியான சேஸிங் இதிலிருந்து தொடங்கியது.

புவனேஷ்வகுமார் ஓவரில் 23 ரன்கள் விளாசப்பட்ட 3 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை எட்டியது மும்பை. ஸ்டிரைக்கில் இடக்கை பேட்டர் இருந்தபோதிலும், இடக்கை சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஸ் அஹமதை அறிமுகம் செய்தார் கம்மின்ஸ். விளைவு முதல் பந்தில் சிக்ஸர் பறந்தாலும், அடுத்த பந்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். இவர் 13 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்துச் சென்றார். இதே ஓவரில் ஆட்டமிழந்திருக்க வேண்டிய ரோஹித் சர்மா, கேட்ச் வாய்ப்பு தவறவிடப்பட்டதால் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் மும்பை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது.

பவர்பிளேவுக்கு பிறகு நமன் திர் அதிரடியாக விளையாடினாலும், திலக் வர்மா மிகவும் தடுமாறினார். ஷாபாஸ் வீசிய 10-வது ஓவரில் அவரும் 3 சிக்ஸர்கள் அடித்து அதிரடிக்கு வந்தார். 10 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்தது மும்பை.

மீண்டும் உனாட்கட்டை அழைக்க, நமன் திர் விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார்.

திலக் வர்மாவும், பாண்டியாவும் சற்று கூட்டணியைக் கட்டமைக்க கடைசி 6 ஓவர்களில் 96 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 24 பந்துகளில் அரை சதம் அடித்த திலக் வர்மாவை (64 ரன்கள்) கம்மின்ஸ் வீழ்த்தினார். மேலும், 15-வது ஓவரில் கம்மின்ஸ் 3 ரன்களை மட்டுமே கொடுத்து மும்பை பேட்டிங்குக்கு நெருக்கடியைத் தந்தார். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட்டுக்கும் பந்து, பேட்டில் சரியாக சிக்கவில்லை. உனாட்கட் ஓவரிலும் மும்பைக்கு 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 13 மற்றும் 16-வது ஓவருக்கு இடையே மும்பை ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்தது. இந்த இடத்தில்தான் ஆட்டம் ஹைதராபாத் கட்டுப்பாட்டுக்குள் சற்று வந்தது.

புவனேஷ்வர் குமார் ஓவரில் டேவிட் சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்க மும்பை அணி 16.4-வது ஓவரில் 200 ரன்களை கடந்தது.

கடைசி 3 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்த இரு ஓவர்களில் டேவிட் இரு பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை அடித்தாலும், 18-வது ஓவரின் கடைசிப் பந்தில் பாண்டியா ஆட்டமிழந்தார். இவர் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இம்பாக்ட் வீரராக ஷெபர்ட் களமிறங்கினார்.

இதனால், கடைசி இரு ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற கடினமான நிலை உருவானது. கம்மின்ஸும் ஷார்ட் பந்துகளாக வீசி பவுண்டரிகளை கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். இந்த ஓவரில் 7 ரன்களை மட்டுமே மும்பை எடுத்தது. மார்கண்டே வீசிய கடைசி ஓவரில் ஷெப்பர்ட் ஆறுதலுக்காக ஒரு சிக்ஸர், இரு பவுண்டரி அடித்தார்.

மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்தப் பருவத்தில் முதல் வெற்றியைப் பெற்றது.

சாதனை:

ஐபிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் 500 ரன்கள் குவிக்கப்பட்டது இதுவே முதன்முறை. இதற்கு முன்பு 2010-ல் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஆட்டத்தில் 469 ரன்கள் குவிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்த ஆட்டத்தில் 38 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. ஐபிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் அடிக்கபட்ட அதிக சிக்ஸர்கள் வரிசையிலும் இந்த ஆட்டத்துக்கே முதலிடம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in