அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் அட்டகாசம்: இந்தியா வெற்றி! | IND v AUS |

அபிஷேக் சர்மாகூட ஒரு ஓவர் வீசினார். வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஒரு ஓவர் கூட வீசவில்லை.
Sundar, Jitesh blitz helps India level series with 5-wicket win over Australia at Hobart
அர்ஷ்தீப் சிங் (கோப்புப்படம்)ANI
2 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20யில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 ஹோபார்டில் இன்று நடைபெற்றது. ஒருவழியாக டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவில் ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ஷான் அபாட் சேர்க்கப்பட்டார்.

முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் தனது வருகையை அறிவித்தார். டிராவிஸ் ஹெட் ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தனது அடுத்த ஓவரில் ஜோஷ் இங்லிஸை 1 ரன்னுக்கு வீழ்த்தினார்.

இரு விக்கெட்டுகள் விழுந்தாலும் அடுத்து களமிறங்கிய டிம் டேவிட், தவறவிடப்பட்ட கேட்ச் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதிரடியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். ஆரம்பம் முதல் பெரும்பாலும் எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த கேப்டன் மார்ஷை 11 ரன்களுக்கு வீழ்த்தினார் வருண் சக்ரவர்த்தி. அடுத்த பந்திலேயே மிட்செல் ஓவனையும் போல்ட் செய்து கலக்கினார்.

இமாலய சிக்ஸர்களை விளாசி 23 பந்துகளில் அரை சதம் அடித்த டிம் டேவிடை இது எதுவும் கட்டுப்படுத்தவில்லை. 10 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இரு வலது கை பேட்டர்கள் இருந்ததால், ஆஃப் ஸ்பின்னராக வாஷிங்டனை கொண்டு வராமல் இழுத்தடித்தார் சூர்யகுமார் யாதவ். 5-வது பந்துவீச்சாளராக வந்த ஷிவம் துபே ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசி ஸ்டாய்னிஸும் அதிரடியில் இறங்கினார். ஆனால், 38 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த டேவிட்டை துபே தான் வீழ்த்தினார்.

கடைசி நேரத்தில் அதிரடி காட்டி வந்த ஸ்டாய்னிஸ் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். மேத்யூ ஷார்டும் இவருடன் இணைந்து வேகமாக விளையாடினார். பும்ரா மற்றும் அர்ஷ்தீப் வீசிய கடைசி இரு ஓவர்களில் மட்டும் இவர்களால் அதிரடி காட்ட முடியவில்லை. 64 ரன்கள் எடுத்த ஸ்டாய்னிஸ் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் ஷிவம் துபே 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். அபிஷேக் சர்மாகூட ஒரு ஓவர் வீசினார். வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஒரு ஓவர் கூட வீசவில்லை.

இந்திய அணியில் வழக்கம்போல் அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினார். அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடர்ந்தார். முதல் 3 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்த நிலையில், நேதன் எல்லிஸ் கொண்டு வரப்பட்டார். இவர் திடீரென வீசிய ஷார்ட் பந்தில் அபிஷேக் சர்மா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 15 ரன்களுக்கு எல்லிஸின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் அடித்த இரு சிக்ஸர்களால் ரன்ரேட் உயர்ந்தது. 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 64 ரன்கள் எடுத்தது.

ஸ்டாய்னிஸ் வந்தவுடன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 105 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தது. 12-வது ஓவரில் எல்லிஸ் மீண்டும் பந்துவீச வர, ஷார்ட் பந்தில் இம்முறை அக்‌ஷர் படேல் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பந்துவீச வாய்ப்பு கிடைக்காத வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து முனைப்பை வெளிப்படுத்தினார். ஷான் அபாட் ஓவரில் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்கள் விளாசினார். இந்திய அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 42 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைந்தது. இதனால், திலக் வர்மா 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும் பதற்றம் அதிகரிக்கவில்லை.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜிதேஷ் சர்மா இறுதிவரை நின்று வெற்றியை உறுதி செய்தார்கள். 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்களும் ஜிதேஷ் சர்மா 22 ரன்களும் எடுத்தார்கள்.

ஆட்டநாயகன் விருதை அர்ஷ்தீப் சிங் வென்றார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளது. நான்காவது டி20 நவம்பர் 6 அன்று நடைபெறுகிறது.

Summary

om Washington Sundar and Jitesh Sharma towards the end and valuable contributions from almost the entire line-up helped India secure a five-wicket win over Australia in the third T20I at Hobart on Sunday.

IND v AUS | Sanju Samson | Washington Sundar | Arshdeep Singh | Suryakumar Yadav | Tim David | Varun Chakravarthy | Marcus Stoinis |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in