பாராலிம்பிக்ஸ் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுஹாஸ் யாத்திராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் (எஸ்எல்4) இறுதிச் சுற்றில் இந்திய வீரர் சுஹாஸ் யாத்திராஜ், ஃபிரான்ஸ் நாட்டின் லூகாஸுடன் விளையாடினார்.
இதில் 21-9, 21-13 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2-வது இடத்தைப் பிடித்தார் சுஹாஸ் யாத்திராஜ். இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீரர் எனும் பெருமையை பெற்றார் சுஹாஸ்.
முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் சுஹாஸ் யாத்திராஜ், லூகாஸ் ஆகியோர் விளையாடினார்கள்.
இதில், லூகாஸ் தங்கப் பதக்கமும், சுஹாஸ் யாத்திராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அதேபோல இந்த பாராலிம்பிக்ஸின் முடிவுகளும் அமைந்துள்ளது.
இந்த பதக்கத்தின் மூலம், இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.