
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாடுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், நடப்பு பருவத்திலிருந்து அவர் விலகியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை எம்எஸ் தோனி ஏற்றுள்ளார். 683 நாள்களுக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றிருக்கிறார் தோனி.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்கையே தேர்வு செய்யவிருந்ததாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார். சிஎஸ்கேவில் ருதுராஜ் கெயிக்வாட், முகேஷ் சௌதரி ஆகியோருக்குப் பதில் ராகுல் திரிபாதி மற்றும் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டார்கள். கேகேஆரில் ஸ்பென்செர் ஜான்சனுக்குப் பதில் மொயீன் அலி சேர்க்கப்பட்டார்.
தொடக்க பேட்டர்களாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார்கள். முதல் மூன்று ஓவர்களில் இரு பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட, 16 ரன்களை தாண்டவில்லை சிஎஸ்கே.
மொயீன் அலி பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற கான்வே 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 6 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது.
விஜய் ஷங்கர் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடிக்க முயன்று ரன்னை உயர்த்தப் பார்த்தாலும், திரிபாதியால் வேகமாக விளையாட முடியவில்லை. இரு கேட்ச் வாய்ப்புகளிலிருந்து தப்பிய விஜய் ஷங்கர் 29 ரன்களுக்கு வருண் சக்ரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் சிஎஸ்கே 61 ரன்கள் எடுத்தது.
விஜய் ஷங்கர் விக்கெட்டுக்கு பிறகு சிஎஸ்கேவின் நிலை இன்னும் மோசமானது. 16 ரன்களுக்கு திரிபாதி ஆட்டமிழந்தவுடன், அஸ்வினை முன்கூட்டியே களமிறக்கினார்கள், பலனளிக்கவில்லை. அவர் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இம்பாக்ட் வீரராக கூடுதல் பேட்டரை களமிறக்கத் திட்டமிட்டு தீபக் ஹூடாவை அனுப்பியது சிஎஸ்கே. இதுவும் பலனளிக்கவில்லை. எந்த இம்பாக்டையும் ஏற்படுத்தாமல் டக் அவுட் ஆனார் ஹூடா.
சரி, எம்எஸ் தோனியாவது காப்பாற்றுவார் என்று பார்த்தால், 1 ரன்னுக்கு நரைன் சுழலில் ஆட்டமிழந்தார்.
டி20 ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்களைத் தண்டிக்கும் வகையில் 19-வது ஓவர் வரை 63 பந்துகளுக்கு பவுண்டரியே அடிக்காமல் விளையாடியது சிஎஸ்கே. கடைசி இரு ஓவர்களில் மூன்று பவுண்டரிகளை நொறுக்கி ஆறுதல் அளித்தார் ஷிவம் துபே. ஒருவழியாக 100 ரன்களை கடந்துவிட்டது சிஎஸ்கே.
20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துபே 31 ரன்கள் எடுத்தார். கேகேஆரில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவின் மூன்றாவது குறைந்தபட்ச ரன்கள்.
சேப்பாக்கத்தில் சிஎஸ்கே எடுத்த குறைவான ரன்கள் இது.
முதலில் பேட்டிங் செய்து எடுத்த இரண்டாவது மிகக் குறைந்த ரன்கள் (முன்பு 97 ரன்கள், 109 ரன்கள்) இது.