
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 1574 வீரர்களின் பட்டியலில் பென் ஸ்டோக்ஸின் பெயர் இடம்பெறவில்லை.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு, அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை அக்.31 அன்று வெளியிட்டன.
இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
1165 இந்திய வீரர்கள் (320 கேப்டு வீரர்கள் மற்றும் 1224 அன்கேப்டு வீரர்கள்) 409 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1574 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இப்பட்டியலில் பென் ஸ்டோக்ஸின் பெயர் இடம்பெறவில்லை.
ஏற்கெனவே, 2024 ஐபிஎல் போட்டியிலிருந்தும் பென் ஸ்டோக்ஸ் விலகியிருந்தார். இந்நிலையில் 2025 ஐபிஎல் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.
மெகா ஏலத்தில் பங்கேற்காத வீரர்கள் மினி ஏலங்களிலும் பங்கேற்க முடியாது என ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் 2026, 2027 ஐபிஎல் போட்டிகளிலும் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை என்றால், அந்த வீரரால் மினி ஏலங்களில் பங்கேற்க முடியும். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு வீரர் விலகும் பட்சத்தில், அவரால் மினி ஏலங்களிலும் பங்கேற்க முடியாது.
பென் ஸ்டோக்ஸ், 2017-ல் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலும், 2018-2021 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், 2023-ல் சிஎஸ்கே அணியிலும் விளையாடினார்.
அதேபோல், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.
கடைசியாக 2014-ல் டி20-யில் விளையாடிய ஆண்டர்சனின் அடிப்படை விலை ரூ. 1.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.