
பிரபல ஆஸி. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளார்.
35 வயது ஸ்டாய்னிஸ் ஆஸி. ஆணிக்காக இதுவரை 71 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி 1,495 ரன்களும் 48 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸும் இடம்பெற்றிருந்தார்.
எனினும் அப்போட்டிக்குப் பிறகு ஒரு ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே ஸ்டாய்னிஸ் விளையாடியிருந்தார். கேம்ரூன் கிரீனுக்குக் காயம் ஏற்பட்டிருந்ததால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸி அணியில் ஸ்டாய்னிஸ் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது ஓய்வு முடிவை வெளியிட்டு கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளார். இனிமேல் டி20 கிரிகெட்டில் முழுக் கவனம் செலுத்தப் போவதாக ஸ்டாய்னிஸ் அறிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸி. அணியில் இருந்து மிட்செல் மார்ஷ் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில் ஸ்டாய்னிஸும் அப்போட்டியில் விளையாடப் போவதில்லை. காயம் காரணமாக கேப்டன் பேட் கம்மின்ஸும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டும் பங்கேற்பது சந்தேமாக உள்ளது.
இதனால் அப்போட்டிக்குச் சரியான வீரர்களைத் தேர்வது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது.