தேர்வுக் குழுவினரிடம் பேச முயன்றேன், ஆனால்...: ரஹானே

தேர்வுக் குழுவினரிடம் பேச முயன்றேன், ஆனால்...: ரஹானே

"கிரிக்கெட் மீதான காதல் தான் என்னை வழிநடத்திச் செல்கிறது."
Published on

ஸ்கை ஸ்போர்ட்ஸில் நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் ஆதர்டன் நடத்திய நேர்காணலில் தனக்கு டெஸ்டில் விளையாட இன்னும் ஆர்வம் இருப்பதாக 37 வயது அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) தெரிவித்துள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒரு டெஸ்டில் கூட ரஹானே விளையாடவில்லை.

"டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட எனக்கு இன்னும் விருப்பம் உள்ளது. டெஸ்டில் மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளேன்.

நான் இங்கு (இங்கிலாந்து) வந்திருப்பது சில நாள்களுக்காகவே என்றாலும், உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக என் பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சிக்கான துணிகளைக் கொண்டு வந்துள்ளேன். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ளன. எனவே, அதற்கான தயார்நிலைகள் தொடங்கியுள்ளன.

என்னைப் பொறுத்தவரை என் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், தேர்வுக் குழுவினருடன் பேச முயன்றிருக்கிறேன். எனக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வீரராக நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும், கிரிக்கெட்டை அனுபவிக்க வேண்டும், என்னால் முடிந்தவற்றை ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டும். டெஸ்ட் விளையாடுவது பிடிக்கும். சிவப்பு நிற பந்தில் விளையாடுவது பிடிக்கும். இதில் தான் எனக்குப் பேரார்வம் உண்டு. கிரிக்கெட் மீதான காதல் தான் என்னை வழிநடத்திச் செல்கிறது" என்றார் ரஹானே.

ஒருநாள் மற்றும் டி20யில் 2011-ல் அறிமுகமானாலும், 2013-ல் தான் இந்திய அணிக்காக டெஸ்டில் அறிமுகமானார் ரஹானே. இந்திய அணிக்காக இவர் 85 டெஸ்டுகளில் 38.46 சராசரியில் 5,077 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2023-ல் டெஸ்டில் விளையாடினார். இதன்பிறகு, இந்திய அணிக்காக இவர் டெஸ்டில் விளையாடவில்லை.

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ரஞ்சி கோப்பையில் மும்பை அணியை வழிநடத்தினார். 2023-24-ல் கோப்பையை வென்று கொடுத்தார். 2024-25-ல் இறுதிச் சுற்று வரை அழைத்துச் சென்றார். சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற மும்பை அணியிலும் ரஹானே இடம்பெற்றிருந்தார். ரஞ்சி கோப்பை 2024-25-ல் 14 இன்னிங்ஸில் 35.92 சராசரியில் 467 ரன்கள் எடுத்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in