
2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை கட்டி ஆண்டுவந்த விராட் கோலி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்கு போட்டுள்ளார்.
டெஸ்டில் 9,230 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி, அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்டர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் 10 ஆயிரம் ரன்கள் எடுக்காமல் ஓய்வு பெற்றது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது.
2014-15 ஆஸ்திரேலியப் பயணத்திலிருந்து கோலியின் ஆதிக்கம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகளில் 86.5 சராசரியில் 4 சதங்களுடன் 692 ரன்கள் குவித்தார்.
ஒரு பேட்டராக கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
2011-ல் அறிமுகமானது முதல் 2014 செப்டம்பர் வரை டெஸ்டில் கோலியின் சராசரி 39.46. 29 டெஸ்டுகளில் 1,855 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2020-க்கு பிறகு 39 டெஸ்டுகளில் வெறும் 30.72 சராசரியில் 2,028 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இடைப்பட்ட அக்டோபர் 2014 முதல் டிசம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில் தான் கோலி தனது உச்சத்தில் இருந்தார். 55 டெஸ்டுகளில் 63.65 சராசரியில் 5,347 ரன்கள் குவித்துள்ளார். மொத்தம் அடித்த 30 சதங்களில் 21 சதங்கள் இந்தக் காலகட்டத்தில் வந்தவை.
கோலி உச்சத்தில் இருந்தபோது ஃபேப் ஃபோர் வீரர்களான ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் என யாராலும் அவரைத் தொடக்கூட முடியவில்லை.
ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2019 வரை, 59 டெஸ்ட் இன்னிங்ஸில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 65.8. இவர் எடுத்த ரன்கள் 3,619 ரன்கள். இதே காலகட்டத்தில் ஜோ ரூட் 44,91 சராசரியில் 3,279 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்டீவ் ஸ்மித் 63.43 சராசரியில் 2,347 ரன்கள் எடுத்திருந்தார். கேன் வில்லிசம்யன் 63.69 சராசரியில் 2,102 ரன்கள் எடுத்திருந்தார். இந்தக் காலகட்டத்தில் அதிக சதங்கள் அடித்தவர்களிலும் 14 சதங்களுடன் கோலியே முதலிடம்.
ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2019 வரை விளையாடிய 34 டெஸ்ட் இன்னிங்ஸில் 6 இரட்டைச் சதங்கள் அடித்தார் கோலி. அவரை விடவும் டான் பிராட்மேன் மட்டுமே 34 டெஸ்ட் இன்னிங்ஸ் இடைவெளியில் அதிகபட்சமாக 8 இரட்டைச் சதங்கள் எடுத்திருந்தார்.
பேட்டர்களுக்கு சவால் அளிக்கக்கூடிய இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 50+ ரன்கள் சராசரியில் 500 ரன்களுக்கு மேல் குவித்த வெளிநாட்டு வீரர்கள் மொத்தமே இருவர் தான். ஒருவர் ராகுல் டிராவிட். மற்றொருவர் விராட் கோலி.
2014-15 ஆஸ்திரேலியப் பயணத்தின்போது 86.5 சராசரியில் 4 சதங்கள் உள்பட 692 ரன்கள் குவித்தார். 2018 இங்கிலாந்து பயணத்தின்போது 59.3 சராசரியில் 2 சதங்கள் உள்பட 593 ரன்கள் குவித்தார் கோலி.
தென்னாப்பிரிக்காவிலும் தான் ஒரு பேரரசன் என்பதை கோலி நிரூபித்துள்ளார். 18 இன்னிங்ஸில் 49.5 சராசரியில் 891 ரன்கள் குவித்துள்ளார் கோலி.
கோலிக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்தது தலைமைப் பொறுப்பு. கேப்டனாக 68 டெஸ்டுகளில் 5,864 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய பங்களிப்பு 16.45%. குறைந்தபட்சம் 50 டெஸ்டுகளில் அணியை வழிநடத்தியவர்களில் இந்தச் சாதனையில் கோலியை மிஞ்சியவர் ஜோ ரூட் மட்டும்தான். கேப்டனாக ஜோ ரூட்டின் பங்களிப்பு 16.68%.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த கேப்டன் விராட் கோலி தான். 68 டெஸ்டுகளில் இந்திய அணியை வழிநடத்தியதன் மூலம், இந்திய அணியை டெஸ்டில் அதிகமுறை வழிநடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் 40 டெஸ்ட் வெற்றிகளுடன் இந்தியாவுக்காக அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமையைக் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதன்முதலாக டெஸ்ட் தொடரை வென்றது கோலியின் தலைமையில் தான். 2018-19ல். அதன்பிறகு 2020-21-லும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. அத்தொடரில் முதல் டெஸ்டை கோலியும் அதன்பிறகு ரஹானேவும் வழிநடத்தினார்கள்.
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கோலி ஏற்ற பிறகு, இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் எழுச்சி பெற்றார்கள். கோலி கேப்டனாக இருந்த 68 டெஸ்டுகளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் சராசரி 26. ஸ்டிரைக் ரேட் 51.39. குறைந்தபட்சம் 50 டெஸ்டுகளில் அணியை வழிநடத்திய கேப்டன்களில் இத்தகைய ஸ்டிரைக் ரேட்டை கொண்டவர்களில் விவ் ரிச்சர்ட்ஸுக்கு அடுத்த இடம் கோலிக்கே. ரிச்சர்ட்ஸ் தலைமையில் 50 டெஸ்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு சராசரி 22.89, ஸ்டிரைக் ரேட் 50.17.
2020-க்கு பிறகு விராட் கோலியின் பேட்டிங் படிப்படியாக சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. டெஸ்டில் 30 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி 2020-க்கு பிறகு 3 சதங்களை மட்டும் அடித்துள்ளார். குறிப்பாக, கடந்த 2024 முதல் 11 டெஸ்டுகளில் ஒரு சதம் ஒரு அரை சதம் மட்டும் எடுத்துள்ளார் கோலி. சரிவின் உச்சமாக கோலி கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய தொடரில் 8 முறையும் ஒரே மாதிரி ஆஃப் ஸ்டம்ப் வெளியே வந்த பந்தைத் தொட்டு ஆட்டமிழந்தார் விராட் கோலி.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய சுழற்சி தொடங்குகிறது. தற்போது வயது 36. புதிய அணியைக் கட்டமைப்பதற்கான சரியான தருணமாக இருக்கட்டும் என இவையனைத்தையும் கருத்தில் கொண்டு விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்திருக்கலாம்.
ஓய்வு பெற்றாலும் பேரரசன் பேரரசனே!