ரோஹித் குற்றச்சாட்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மறுப்பு

"வீரர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதியுடன்தான் உள்ளது."
ரோஹித் குற்றச்சாட்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மறுப்பு
ANI

கிரிக்கெட் வீரர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதில் உறுதியுடன் இருப்பதாக ரோஹித் சர்மாவுக்குப் பதில் தரும் வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரோஹித் சர்மாவும், அபிஷேக் நாயரும் உரையாடிக்கொண்டிருந்த காணொளி ஒன்றை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மே 11-ல் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றம் செய்தது. இந்தக் காணொளியில் ரோஹித் சர்மா பேசுவதும் பதிவாகியிருந்தது. இதில் மும்பை இந்தியன்ஸுடனான தனது எதிர்காலம் குறித்து ரோஹித் பேசியதாகத் தகவல்கள் கசிந்த நிலையில், இந்தக் காணொளியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனைத்துத் தளங்களிலிருந்தும் நீக்கியது.

இதைத் தொடர்ந்து, மே 16-ல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் அட்டவணை குறித்து தவல் குல்கர்னியிடம் ரோஹித் சர்மா பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது, உரையாடல் பதிவு செய்யப்படுவதை அறிந்த ரோஹித் சர்மா, தயவு செய்து இதைப் பதிவு செய்ய வேண்டாம் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா தனது எக்ஸ் தளத்தில், தான் கூறியதை மீறியும் தன்னுடைய தனிப்பட்ட உரையாடல் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

ரோஹித் சர்மாவின் எக்ஸ் தளப் பதிவு:

"கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு நகர்வும் கேமிராக்களில் பதிவு செய்யப்படுகிறது. ஆட்ட நாள்கள் அல்லது பயிற்சி நாள்களில் நண்பர்கள் மற்றும் சக வீரர்களுடனான உரையாடல்கள் கேமிராக்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் அசௌகரியமாகியுள்ளது.

என்னுடைய உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று சொல்லியும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் அது பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்புவது தனியுரிமையை மீறும் செயலாகும். பிரத்யேகமானத் தகவலைச் சேகரிக்க வேண்டும் என்கிற தேவை, அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதில் மட்டுமே இருக்கும் கவனம் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையிலான நம்பகத்தன்மையை ஒரு நாள் நிச்சயம் முறிக்கும். நல்ல சிந்தனை மேலோங்கட்டும்."

இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரோஹித் சர்மாவின் பதிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

"வான்கெடே மைதானத்தில் மே 16-ல் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட காணொளி அது. இந்தக் காணொளியைப் பதிவு செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி உண்டு. பயிற்சியின்போது மூத்த வீரர் தனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இந்த உரையாடலின் ஆடியோ பதிவு செய்யப்படவும் இல்லை, அது ஒளிபரப்பப்படவும் இல்லை.

உரையாடலின் ஆடியோவை பதிவு செய்ய வேண்டாம் என்று மூத்த வீரர் கோரிக்கை வைப்பது மட்டுமே காணொளியில் இடம்பெற்றிருந்தது. அதுதான் ஒளிபரப்பப்பட்டது. வீரர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதியுடன்தான் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in