நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வெற்றி!

2-வது டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்றது இலங்கை அணி.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வெற்றி!
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இலங்கை அணி.

இலங்கை - நியூசிலாந்துக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த செப். 26 அன்று கல்லே சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 602 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்குச் சுருண்டது. சிறப்பாகப் பந்துவீசிய பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கியது இலங்கை.

2-வது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது. இருப்பினும் அந்த அணியால் 360 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கிளென் பிலிப்ஸ் 78, மிட்செல் சான்ட்னர் 67, கான்வே 61 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் பெய்ரிஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இலங்கை அணி. ஏற்கெனவே முதல் டெஸ்டிலும் வெற்றி பெற்ற இலங்கை இத்தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. மேலும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இலங்கை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in