நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை - நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த 18 அன்று கல்லே சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வில் ஒ ரோக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 340 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் பிறகு 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 309 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாகப் பந்துவீசிய அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 3.4 ஓவர்கள் மட்டுமே விளையாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்த டெஸ்டில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ரச்சின் ரவீந்திரா 92 ரன்களில் வெளியேறினார். பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெயசூர்யா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.