ஐபிஎல்: இலங்கைத் தமிழரைத் தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இலங்கையிலிருந்து சர்வதேச அளவில் ஒளிபரப்பப்படும் போட்டியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதல் வீரர் என்பதே இவரது சாதனை.
ஐபிஎல்: இலங்கைத் தமிழரைத் தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
படம்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
1 min read

ஐபிஎல் போட்டியிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியதையடுத்து, அவருக்குப் பதில் இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2024 ஏலத்தில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 1.5 கோடிக்குத் தேர்வு செய்தது. ஆனால், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் பருவத்திலிருந்து இவர் விலகினார்.

இவருக்குப் பதில் மாற்று வீரராக இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தேர்வு செய்துள்ளது. அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2020-ல் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடும் இளம் வீரர் (18 வயது 364 நாள்கள்) என்ற பெருமையை இவர் பெற்றார். இலங்கையிலிருந்து சர்வதேச அளவில் ஒளிபரப்பப்படும் போட்டியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதல் வீரர் என்பதே இவரது சாதனை. இவரும் மணிக்கட்டை சுழற்றி பந்துவீசுபவர்.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடினார்.

ஐஎல்டி20 போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 4 ஆட்டங்களில் 5.43 எகானமியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த ஐபிஎல் பருவத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இயக்குநர் குமார் சங்கக்காரா இவரை வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அழைத்து வந்தார்.

தற்போது முத்தையா முரளிதரன் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இவரை ஹசரங்காவுக்குப் பதில் மாற்று வீரராகத் தேர்வு செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in