சன்ரைசர்ஸ் சுழலில் சிக்கிய ராஜஸ்தான் தோல்வி: இறுதிச் சுற்றில் கேகேஆர் v சன்ரைசர்ஸ்

ஆட்ட நாயகன் விருதை 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாபாஸ் அஹமது கைப்பற்றினார்.
சன்ரைசர்ஸ் சுழலில் சிக்கிய ராஜஸ்தான் தோல்வி: இறுதிச் சுற்றில் கேகேஆர் v சன்ரைசர்ஸ்
ANI

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸுக்கு இந்த முறையும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தாலும், இதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

அபிஷேக் விக்கெட்டுக்கு பிறகு பெரும்பாலான ஸ்டிரைக்கை எடுத்துக்கொண்ட ராகுல் திரிபாதி, அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். குறிப்பாக அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து அபிஷேக் இல்லாத குறையைத் தீர்த்து வைத்தார்.

ஆனால், போல்ட் பந்தில் வேகத்தைக் குறைத்து ஷார்ட்டாக வீச, இதை அப்பர் கட் செய்ய முயன்று, ஷார்ட் தேர்ட் மேனிடம் கேட்ச் ஆனார். இவர் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கில் பலம் சேர்ப்பதற்காக அணியில் சேர்க்கப்பட்ட எய்டன் மார்க்ரம் 1 ரன்னுக்கு இதே ஓவரில் ஆட்டமிழந்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் ஹெட் இரு பவுண்டரிகள் அடிக்க, அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்தது.

ஹெட் சற்று அதிரடி காட்டத் தொடங்கினார். இவரும் ராகுல் திரிபாதியைப்போல குறைவான வேகத்தில் வீசப்பட்ட ஷார்ட் பந்தை அப்பர் கட் செய்ய முயன்று ஷார்ட் தேர்ட் மேனிடம் கேட்ச் ஆனார். இவர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

11-வது ஓவரில் 100 ரன்களை கடந்த சன்ரைசர்ஸ் விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் எடுக்கும் வேகத்தைக் குறைத்துக் கொண்டது. பவுண்டரி கிடைக்காத விரக்தியில் ஆவேஷ் கான் பந்தில் ரிவர்ஸ் ஸ்கூப் செய்ய முயன்ற நிதிஷ் குமாரும் ஷார்ட் தேர்ட் மேனிடம் ஆட்டமிழந்தார். அப்துல் சமத் முதல் பந்திலேயே போல்டானார்.

14 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததால், இம்பாக்ட் வீரராக ஷாபாஸ் அஹமது களமிறக்கப்பட்டார். விக்கெட்டுகள் சரிந்தாலும், கிளாஸென் மட்டும் களத்தில் நின்று நம்பிக்கையளித்து வந்தார். 17-வது ஓவரில் சன்ரைசர்ஸ் 150 ரன்களை தொட்டது. அவ்வப்போது சிக்ஸர் அடித்து வந்த கிளாஸென் 33 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். கடைசி இரு ஓவர்களில் பெரிய அதிரடியை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, சந்தீப் சர்மா வீசிய அட்டகாசமான யார்க்கரில் கிளாஸென் போல்டானார்.

இதனால், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டுவதற்கான வாய்ப்பை சன்ரைசர்ஸ் இழந்தது. கடைசி இரு ஓவர்களில் மொத்தம் இரு பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன. 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

இறுதிச் சுற்றுக்கான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்கம் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. புவனேஷ்வர் குமார் பந்துகளில் ஜெயிஸ்வால் சிக்ஸர், பவுண்டரி அடித்தாலும் மறுமுனையில் பட்லர் இல்லாததை உணர்ந்தது. டாம் கோலர் காட்மோர் பந்தை பேட்டில் வாங்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இதனால், 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது. கம்மின்ஸ் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று இவர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முதல் 5 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ராஜஸ்தான், பவர்பிளேயின் கடைசி ஓவரில் 19 ரன்களை விளாசியது. ஜெயிஸ்வால் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து அதகளப்படுத்தினார். 6 ஓவர்களில் ராஜஸ்தான் 51 ரன்கள் எடுத்தது.

ஆடுகளத்தில் சுழலுக்கு ஒத்துழைப்பு இருப்பதை உணர்ந்த பேட் கம்மின்ஸ் ஷாபாஸ் அஹமதிடம் பந்தைக் கொடுத்தார். முதல் ஓவரிலேயே ஜெயிஸ்வால் (21 பந்துகள் 42 ரன்கள்) எனும் மிக முக்கியமான விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார்.

அடுத்த ஓவரை வீசச் சொல்லி அபிஷேக் சர்மாவிடம் பந்தைக் கொடுத்தார் கம்மின்ஸ். இவர் அடுத்த மிக முக்கியமான சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். இளம் வீரர்கள் ரியான் பராக், துருவ் ஜுரெல் அணியைச் சரிவிலிருந்து மீட்பார்கள் என்று எதிர்பார்த்தபோது, தவறான ஷாட்டால் ஷாபாஸ் சுழலில் பராக் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகளை பாதுகாப்பதற்காக முன்கூட்டியே களமிறக்கப்பட்ட அஸ்வின் மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ராஜஸ்தானைப் பெரும்பாலும் சரிவிலிருந்து காக்கும் ஹெட்மையரும் இன்று சொதப்பினார். அபிஷேக் சுழலில் போல்டானார்.

கடைசி 6 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 83 ரன்கள் தேவைப்பட, துருவ் ஜுரெல் மட்டும் தனி நபராகப் போராடினார். இவருடைய அதிரடியால் 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

ஆனால், 18-வது ஓவரை சிறப்பாக வீசிய நடராஜன் வெறும் 1 ரன் கொடுத்து ரோவ்மன் பவல் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி இரு ஓவர்களில் 52 ரன்கள் தேவை என்ற நிலை வந்தவுடன் ராஜஸ்தானின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜுரெல் மட்டும் கடைசி ஓவர் வரை போராடினார். 26 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் விளாசினார். ராஜஸ்தான் ராயல்ஸால் 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாகப் பயன்படுத்தியது சன்ரைசர்ஸுக்கு வெற்றி தேடித் தந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாபாஸ் அஹமது கைப்பற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிச் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in