266 ரன்கள்: தில்லியை நொறுக்கி வீசி சன்ரைசர்ஸ் வெற்றி!

சிறப்பாகப் பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
266 ரன்கள்: தில்லியை நொறுக்கி வீசி சன்ரைசர்ஸ் வெற்றி!
ANI

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 266 ரன்கள் விளாசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் 35-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸில் இந்த ஐபிஎல் முழுவதும் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா சிக்ஸர், பவுண்டரி அடிப்பது தவிர வேறு எதுவும் செய்வதில்லை. இன்றைய ஆட்டத்திலும் அதுவே தொடர்ந்தது. கலீல் அஹமது வீசிய இன்னிங்ஸின் 2-வது பந்தில் வழக்கம்போல கால்களை விலக்கிக்கொண்டு சிக்ஸரை பறக்கவிட்டார். முந்தைய ஆட்டங்களைக் காட்டிலும் இருவரும் இன்று டாப் கியரில் பறந்தார்கள்.

முதல் ஓவரில் 19 ரன்கள், 2-வது ஓவரில் 21 ரன்கள், 3-வது ஓவரில் 22 ரன்கள், 4-வது ஓவரில் மீண்டும் 21 ரன்கள் விளாசினார்கள். ஹெட் 16 பந்துகளில் அரை சதம் அடித்தார். 4 ஓவர்களிலேயே அந்த அணி 83 ரன்களைத் தொட்டது.

இதனால், குல்தீப் யாதவை அழைத்தார் ரிஷப் பந்த். இவரது ஓவரில் அபிஷேக் சர்மா மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். 5 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் 103 ரன்களை எட்டி தில்லியை நொறுக்கியது. பவர்பிளேயின் கடைசி ஓவரில் மீண்டும் ஒரு 22 ரன்கள். 6 ஓவர்களில் 125 ரன்கள். டி20 வரலாற்றில் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவே. ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் 105 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

பவர்பிளே முடிந்தவுடன் குல்தீப் பந்தில் மீண்டும் சிக்ஸர் அடித்த அபிஷேக் சர்மா, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இவர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 383.33 ஸ்டிரைக் ரேட்டில் 46 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் கூட்டணி 38 பந்துகளில் 131 ரன்கள் அடித்தது.

அடுத்து வந்த மார்க்ரம் 1 ரன் எடுத்து குல்தீப் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

குல்தீப் யாதவ் வீசிய 9-வது ஓவரில் கிளாஸென் இரு சிக்ஸர்களை விளாசினார். 9-வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் 150 ரன்களைத் தாண்டியது.

எனினும் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப், ஓவரின் கடைசிப் பந்தில் ஹெட்டை வீழ்த்தினார். இவர் 32 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசினார். இவருடைய ஸ்டிரைக் ரேட் 278.12.

அக்‌ஷர் படேல் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் கிளாஸென் 15 ரன்களுக்கு போல்டானார்.

அச்சுறுத்தலான விக்கெட்டுகள் விழுந்ததால், தில்லி அணி ஆட்டத்தை சற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஷாபாஸ் அஹமது கூட்டணி அமைத்தார்கள். அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன்களை உயர்த்த, சன்ரைசர்ஸ் 15-வது ஓவரில் 200 ரன்களைத் தொட்டது.

கடைசி 5 ஓவர்களில் அதிரடிக்கு மாற முயற்சித்தார்கள். குல்தீப் யாதவ் பந்தில் நிதிஷ் குமார் ஆட்டமிழந்தார். இவர் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இந்தக் கூட்டணி 47 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தது.

அடுத்து வந்த அப்துல் சமத் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார். ஷாபாஸ் அஹமது கடைசி ஓவர் வரை நின்று பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசி ஐபிஎல் போட்டியில் முதல் அரை சதத்தை அடித்தார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை அதிரடியாக நிறைவு செய்ய சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாபாஸ் அஹமது 29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இத்தனை பவுண்டரி, சிக்ஸர்களுக்கு மத்தியில் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

267 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய தில்லிக்கு அதிரடியான தொடக்கம் தேவைப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்த பிரித்வி ஷா, 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் வார்னர் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், ஜேக் ஃபிரேசர் மெக்கெர்க் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தில்லிக்கு நம்பிக்கையளித்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 3-வது ஓவரில் தலா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்து 30 ரன்கள் எடுத்தார்.

கம்மின்ஸ் ஓவரில் அபிஷேக் போரெல் இரு பவுண்டரி அடிக்க, மெக்கெர்க் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். 5 ஓவர்களில் தில்லி 81 ரன்களுக்கு விரைந்தது.

பவர்பிளேயின் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நடராஜன் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். 6 ஓவர்கள் முடிவில் தில்லி 88 ரன்கள் எடுத்தது.

அடுத்து மார்கண்டே வீசிய ஓவரில் மெக்கெர்க் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் அரை சதம் அடித்தார். எனினும், இதே ஓவரில் இவர் விக்கெட்டையும் இழந்தார். மெக்கெர்க் 18 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் விளாசினார்.

ஷாபாஸ் அஹமது வீசிய 8-வது ஓவரில் அபிஷேக் போரெலும் அதிரடி காட்டி 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை அடித்தார். 8 ஓவர்கள் முடிவில் தில்லி 131 ரன்கள் எடுத்தது. தில்லி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 12-க்கு கீழ் இருந்தது.

இதன்பிறகு, ஆட்டத்தை முற்றிலுமாகத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சன்ரைசர்ஸ். 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த போரெல், மார்கண்டே பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் சரியான டைமிங் கிடைக்காமல் திணறினார்கள். ஸ்டப்ஸ் 11 பந்துகளில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தில்லி பேட்டர்கள் மொத்தமாகவே ஒரு பவுண்டரி மட்டும்தான் அடித்தார்கள்.

கடைசி ஓவர் வரை போராடியும் டைமிங் கிடைக்காமல் திணறி வந்த தில்லி கேப்டன் ரிஷப் பந்த் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

தில்லி அணி 19.1 ஓவரில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாகப் பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in