மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: பிளேஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ்!

பிளேஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்ற நிலையில், ஆர்சிபி - சிஎஸ்கே ஆட்டத்தின் முடிவை பொறுத்து 4-வது அணி யார்? என்பது தெரியவரும்.
பிளேஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ்!
பிளேஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ்!ANI

ஹைதராபாதில் நடக்கவிருந்த குஜராத் - சன்ரைசர்ஸ் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்ட நிலையில் 15 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இனி ஒரு ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் சன்ரைசர்ஸ் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று, ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் சன்ரைசர்ஸ் 2-வது இடத்திற்கு முன்னேறும்.

பிளேஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றது. கடைசி ஒரு இடத்துக்கு 4 அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது. இதில் லக்னௌ மற்றும் தில்லி அணிகளுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

மே 18 அன்று நடைபெறும் சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றாலே போதுமானது. ஆனால் ஆர்சிபி அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் (இலக்கு 201-ஆக இருந்தால்). அதேபோல 201 ரன்கள் இலக்கை நோக்கி ஆர்சிபி விளையாடினால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும்.

சிஎஸ்கே இந்த ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்று ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்தால், சிஎஸ்கே அணி 2-வது இடத்துக்கு முன்னேறும். எனவே நடக்கவிருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே ஆட்டம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னதாக ராஜஸ்தான், கேகேஆர் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in