277 ரன்கள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடைத்த சாதனைகள்!

ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள்; அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள்; கிளாஸென் 34 பந்துகளில் 80* ரன்கள்
277 ரன்கள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடைத்த சாதனைகள்!
ANI

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பையில் லுக் வுட்டுக்குப் பதில் க்வெனா மபாக சேர்க்கப்பட்டார். ஹைதராபாதில் மார்கோ யான்சென், நடராஜனுக்குப் பதில் டிராவிஸ் ஹெட், உனாட்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள்.

தொடக்க பேட்டர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். மபாக முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஹெட் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தன. பாண்டியா வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் தவறவிட்டார். மும்பையின் இந்தத் தவறிலிருந்து ஆட்டம் தொடங்கியது.

மபாக வீசிய மூன்றாவது ஓவரில் ஹெட் தலா இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரிகளை விளாசினார். உடனடியாக பும்ராவை அழைத்தார் பாண்டியா. இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே அவர் கொடுத்தார்.

அடுத்த ஓவரில் அகர்வாலை பாண்டியா வீழ்த்தியது, மும்பை செய்த அடுத்தத் தவறாக மாறியது. ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் மும்பை பந்துவீச்சாளர்களைப் புரட்டிப்போட பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தியும் பலனில்லை. 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார் அபிஷேக்.

ஹெட் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதுவே ஹைதராபாதுக்காக அடிக்கப்பட்ட அதிவேக அரை சதமாக இருந்தது. இவரைத் தொடர்ந்து 16 பந்துகளில் அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா, ஹெட் செய்த சாதனையை 22 நிமிடங்களிலேயே முறியடித்தார்.

ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் 10 ஓவர்களில் அந்த அணி 148 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, பும்ரா மட்டும் ஓரளவுக்கு ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினாலும், மற்ற எந்த பந்துவீச்சாளர்களுக்கும் இன்றைய நாள் எடுபடவில்லை. 15-வது ஓவரிலேயே ஹைதராபாத் 200 ரன்களைக் கடந்தது. கிளாஸென் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

19-வது ஓவரிலேயே ஹைதராபாத் 250 ரன்களை கடந்ததால், ஐபிஎல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல ஷாம்ஸ் முலானி வீசிய கடைசி ஓவரில் கிளாஸென் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளாஸென் 34 பந்துகளில் 80 ரன்களும், மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தார்கள்.

இன்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்ட சாதனைகள்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக அரை சதம்:

  • அபிஷேக் சர்மா - 16 பந்துகள் (இன்று)

  • டிராவிஸ் ஹெட் - 18 பந்துகள் (இன்று)

  • டேவிட் வார்னர் - 20 பந்துகள் (இருமுறை)

  • ஹென்ரிகஸ் - 20 பந்துகள்

குறைந்த பந்துகளில் முதல் 100 ரன்கள்:

  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 36 பந்துகள் (v பஞ்சாப், 2014)

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 36 பந்துகள் (v ஆர்சிபி, 2017)

  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 41 பந்துகள் (v மும்பை, 2015)

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 42 பந்துகள் (இன்று)

குறைந்த பந்துகளில் முதல் 200 ரன்கள்:

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 85 பந்துகள் (v கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2016)

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 88 பந்துகள் (இன்று)

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 95 பந்துகள் (v புனே வாரியர்ஸ் இந்தியா, 2013)

  • லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 95 பந்துகள் (v பஞ்சாப் கிங்ஸ், 2023)

ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள்:

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 148 ரன்கள் (இன்று)

  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 131 ரன்கள் (v சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2014)

  • மும்பை இந்தியன்ஸ் - 131 ரன்கள் (v சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2021)

  • டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் - 130 ரன்கள் (v மும்பை இந்தியன்ஸ், 2008)

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 129 ரன்கள் (v கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2016)

டி20 லீக் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள்:

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 277/3 (v மும்பை இந்தியன்ஸ், இன்று) - ஐபிஎல்

  • மெல்போர்ன் ஸ்டார்ஸ் - 273/2 (v ஹோபார்ட் ஹரிகேன்ஸ், 2022) - பிபிஎல்

  • டைடன்ஸ் 271/3 - (v நைட்ஸ், 2022) - சிஎஸ்ஏ டி20

  • டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் 267/2 - (v ஜமைக்கா தாலாவாலாஸ், 2019) - சிபிஎல்

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 263/5 - (v புனே வாரியர்ஸ் இந்தியா) - ஐபிஎல்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in