சன்ரைசர்ஸிடம் தோல்வி: பிளேஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்த சிஎஸ்கே!

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, சென்னையில் சிஎஸ்கேவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியை அடைந்தது.
சன்ரைசர்ஸிடம் தோல்வி: பிளேஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்த சிஎஸ்கே!
ANI
2 min read

இந்த வருட ஐபிஎல்-லில் சிஎஸ்கே மட்டுமல்லாமல் சன்ரைசர்ஸும் மோசமாக விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் அவற்றின் ரசிகர்களுக்கு ஏதோவொரு விதத்தில் இன்று வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ், பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் மூன்று மாற்றங்கள். ரச்சின் ரவீந்திரா, விஜய் ஷங்கர், ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக டியவால்ட் பிரேவிஸ், தீபக் ஹூடா, சாம் கரண் சேர்க்கப்பட்டார்கள். மீண்டும் தீபக் ஹூடாவா என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே ஏற்பட்டிருக்கும்.

சிஎஸ்கே அணி மிகவும் நம்பிக்கை வைத்து ஷேக் ரஷீத்தையும் ஆயுஷ் மாத்ரேவையும் தொடக்க வீரர்களாக அனுப்பியது. ஷேக் ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆயுஷ் மாத்ரே இன்றும் அபாரமாக விளையாடி பவர்பிளேயில் 6 பவுண்டரிகள் அடித்தார். எனினும் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாம் கரணும் ஜடேஜாவும் களமிறங்கி முறையே 9, 21 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். தென்னாப்பிரிக்க இளம் பேட்டர் பிரேவிஸ், முதல் ஆட்டத்திலேயே அசத்தினார். நடுவரிசையில் சிஎஸ்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிரடி ஆட்டத்தை வழங்கினார். 4 சிக்ஸர்களும் 1 பவுண்டரிகளும் அடித்தாலும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஹர்ஷல் படேல் பந்தில் கமிந்து மெண்டிஸின் நம்பமுடியாத கேட்சில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தோனியும் நீண்ட நேரம் நிற்கவில்லை. ஒரு பவுண்டரி அடித்து 6 ரன்களுக்கு வீழ்ந்தார். தீபக் ஹூடா கடைசி வரை நின்று 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்தது. ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சன்ரைசர்ஸ் அணி 2-வது பந்திலேயே கலீல் அஹமது பந்தில் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. அன்ஷுல் கம்போஜ் அற்புதமாகப் பந்துவீசி 19 ரன்களுக்கு டிராவிஸ் ஹெட்டை போல்ட் செய்தார். இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் 37 ரன்கள் தான் எடுத்தது. கிளாசெனின் விக்கெட்டை ஜடேஜா 7 ரன்களுக்கு வீழ்த்திய பிறகு ஆட்டம் பரபரப்பானது. 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸுக்கு நம்பிக்கையளித்த இஷான் கிஷன், நூர் அஹமது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர்கள் அடித்து அதிரடியாக விளையாடி வந்த அனிகெத் வர்மா, மற்றொரு சிக்ஸரை அடிக்க ஆசைப்பட்டு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 6 ஓவர்களில் 49 ரன்கள் தேவை என்கிற நிலைமையில் பரபரப்பான முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்த இடத்தில் சன்ரைசர்ஸுக்கு அருமையான கூட்டணி அமைத்தது. கமிந்து மெண்டிஸும் நிதிஷ் குமார் ரெட்டியும் மிகச்சரியாக பேட்டிங் செய்தார்கள். தகுந்த நேரத்தில் பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டைக் குறைத்தார்கள். சிஎஸ்கேவுக்கு எவ்வித வாய்ப்பும் வழங்காமல் 18.4 ஓவர்களில் இலக்கை அடைந்தார்கள். கமிந்து மெண்டிஸ் 32, நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, சென்னையில் சிஎஸ்கேவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியை அடைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in