கடைசிப் பந்தில் வெற்றியைத் தவறவிட்ட ராஜஸ்தான் அணி!

என்னவொரு பரபரப்பான ஆட்டம்! ஒரு ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி.
கடைசிப் பந்தில் வெற்றியைத் தவறவிட்ட ராஜஸ்தான் அணி!
கடைசிப் பந்தில் வெற்றியைத் தவறவிட்ட ராஜஸ்தான் அணி!ANI

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் 50-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் அணிகள் ஹைதராபாதில் விளையாடின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அதிகம் எதிர்பார்த்த அபிஷேக் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதைத் தொடர்ந்து ஹெட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி அருமையான கூட்டணி அமைத்தனர். அபாரமாக விளையாடிய ஹெட் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்ந்து 96 ரன்கள் எடுத்தப் பிறகு அவேஷ் கான் இந்த ஜோடியை பிரித்தார். ஹெட் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பிறகு சிறப்பாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி அரைசதம் அடிக்க அவருக்கு பக்கபலமாக கிளாஸன் நல்ல கூட்டணியை அமைத்து தந்தார். இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிதிஷ் குமார் ரெட்டி 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 76 ரன்களும், கிளாஸன் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர்.

இதன் பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் ஓவரில் புவனேஷ்வர் குமார் பட்லர், சாம்சன் ஆகியோரை ரன் எடுக்கவிடாமல் வெளியேறச் செய்தார். இதைத் தொடர்ந்து ஜெயிஸ்வால் மற்றும் ரியான் பராக் சிறப்பான கூட்டணியை அமைத்தனர். பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது.

இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது ராஜஸ்தான் அணி. இந்த ஜோடி 134 ரன்கள் சேர்த்த நிலையில் நடராஜன் பிரித்தார். ஜெயிஸ்வால் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பராக் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணிக்கு 4 ஓவர்களில் 42 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் தனது கடைசி ஓவரை சிறப்பாக வீசி ஹெட்மயரை வெளியேற்றினார். ஹெட்மயர் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு துருவ் ஜூரெல் 1 ரன்னில் வெளியேறினார். 19-வது ஓவரில் முதல் 5 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே வந்தது, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார் பவல். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பவுண்டரி உட்பட 5 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அற்புதமான பந்தை வீசி புவனேஷ்வர் குமார் பவலை ஆட்டமிழக்கச் செய்தார்.

இதனால் சன்ரைசர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவல் 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் அணியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், நடராஜன் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in