இமாலய ஸ்கோர் எடுத்து ஆர்சிபியை வீழ்த்திய சன்ரைசர்ஸ்!

தினேஷ் கார்த்திக் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்.
இமாலய ஸ்கோர் எடுத்து ஆர்சிபியை வீழ்த்திய சன்ரைசர்ஸ்!
இமாலய ஸ்கோர் எடுத்து ஆர்சிபியை வீழ்த்திய சன்ரைசர்ஸ்!ANI

ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் பெங்களூருவில் விளையாடின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அபிஷேக்கும், டிராவிஸ் ஹெட்டும் ஜேக்ஸ் ஓவரில் சற்று பொறுமையுடனே விளையாடினர். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவரில் அடித்தால் சிக்ஸர் மற்றும் பவுண்டரி என விளையாடினார்கள்.

பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் சேர்த்தது. ஹெட் 20 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

டிராவிஸ் ஹெட் தொடர்ந்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடிக்க 8-வது ஓவரிலேயே அந்த அணி 100 ரன்களை தொட்டது. 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா டாப்லி பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஹெட் 39 பந்துகளில் சதமடித்தார். இது அவரின் முதல் ஐபிஎல் சதமாகும்.

12 ஓவர்களில் 158 ரன்கள் விளாசியதால், 277 ரன்கள் சாதனைக்கு அச்சுறுத்தல் உருவானது. சதமடித்த ஹெட் 41 பந்துகளில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் 8 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் விளாசினார்.

15-வது ஓவரில் ஹைதராபாத் அணி 200 ரன்களைக் கடந்தது. கிளாஸென் 23-வது பந்தில் அரை சதத்தை எட்டினார். கிளாஸென் 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து 17-வது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு அப்துல் சமத் 19-வது ஓவரில் இரு சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகள் விளாசினார். கடைசி ஓவரில் மார்க்ரம் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடிக்க அப்துல் சமத் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களும், சமத் 10 பந்துகளில் 37 ரன்களும் விளாசினார்கள். கடந்த மார்ச் 27-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் குவித்து சாதனை படைத்த ஹைதராபாத், அதே சாதனையை இன்று முறியடித்தது.

இதைத் தொடர்ந்து இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலியும், டு பிளெஸ்ஸியும் நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தனர். இருவரின் அதிரடியால் 6 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்தது ஆர்சிபி அணி. 80 ரன்களை சேர்த்த இந்த ஜோடியை மார்கண்டே பிரித்தார். கோலி 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பிறகு வில் ஜேக்ஸ் 7 ரன்களிலும், படிதார் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அரை சதம் அடித்த டு பிளெஸ்ஸி 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். 7.5 ஓவர்களில் 100 ரன்களை கடந்த ஆர்சிபி அணி கம்மின்ஸின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கார்த்திக் அரை சதம் அடித்தார். அவர் மட்டும் தனியாக போராட அவருடன் யாரும் நல்ல கூட்டணியை அமைக்கவில்லை. இதைத் தொடர்ந்து 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக் வெளியேறினார்.

20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அனுஜ் ராவத் 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஆர்சிபி அணிக்கு 6-வது தோல்வியாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in