பஞ்சாபை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும், தோல்வியடையும் பட்சத்தில் சன்ரைசர்ஸ் இரண்டாவது இடத்தைத் தக்கவைக்கும்.
பஞ்சாபை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!
ANI

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் லீக் சுற்றுக்கான கடைசி நாளில் இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஜிதேஷ் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாபுக்கு அதர்வா டைடே மற்றும் பிரப்சிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார்கள். முதலிரு ஓவர்களில் தலா ஒரு பவுண்டரி என விளையாடிய இருவரும், அடுத்த இரு ஓவர்களில் தலா இரு பவுண்டரிகள் என விளையாடினார்கள். பவர்பிளேயின் கடைசி இரு ஓவரில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என படிப்படியாக அதிரடிக்கான கியரை மாற்ற 6 ஓவர்களில் அந்த அணி 61 ரன்கள் விளாசியது.

பவர்பிளே முடிந்தவுடன் சுழற்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்தியும் ஹைதராபாதுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 10-வது ஓவரை வீசிய நடராஜன் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதர்வா டைட் 27 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

அணியில் இடம்பெற்றுள்ள ஒரே வெளிநாட்டு வீரரான ரைலி ரூசோவ் அடுத்து களமிறங்கி ரன் ரேட்டை மேலும் உயர்த்தினார். 12 ஓவர்களில் 129 ரன்கள் என விரைந்தது பஞ்சாப்.

அரை சதம் அடித்தும் அதிரடி காட்டி வந்த பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 15 ஓவர்களில் பஞ்சாப் அணி 159 ரன்கள் எடுத்தது.

கடைசி 5 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், பேட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோர் தலா ஒரு ஓவர் வீசினார்கள். இவர்கள் மூவரும் மொத்தமாக மூன்று ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்தார்கள். ரைலி ரூசோவை கம்மின்ஸும், அஷுதோஷ் சர்மாவை நடராஜனும் வீழ்த்தினார்கள். ரூசோவ் 24 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார்.

ஆனால், பஞ்சாப் பேட்டர்கள் நிதிஷ் குமாரின் இரு ஓவர்களைக் குறிவைத்து ரன்களை உயர்த்தினார்கள். இவர் வீசிய 16-வது ஓவரில் 15 ரன்கள். மீண்டும் கடைசி ஓவரையும் நிதிஷ் குமார்தான் வீசினார். இந்த ஓவரில் பஞ்சாப் கேப்டன் ஜிதேஷ் சர்மா ஒரு பவுண்டரி மற்றும் இரு சிக்ஸர்கள் விளாச, அணியின் ஸ்கோர் 210-ஐ தாண்டியது.

20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார்.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸின் நட்சத்திரக் கூட்டணியான ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை களமிறங்கியது. அர்ஷ்தீப் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே போல்டாகி ஹெட் வெளியேறினார்.

ஆனால், அடுத்து வந்த ராகுல் திரிபாதி எதுவும் நடக்காதவாறு முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகள் அடித்தார். ரிஷி தவன் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் அடித்தார்.

இதைப் பார்த்துக்கொண்டு அபிஷேக் சர்மா மறுமுனையில் அமைதி காப்பாரா என்ன?. அவரும் மூன்றாவது ஓவரிலிருந்து அதிரடிக்கு மாறினார்.

5-வது ஓவரில் ஹர்ஷல் படேல் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் 5 பந்துகளில் நோ-பால் சிக்ஸர் உள்பட 22 ரன்கள் கொடுத்த அவர் கடைசிப் பந்தில் திரிபாதி விக்கெட்டை வீழ்த்தினார். திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 6 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் 84 ரன்கள் விளாசியது.

பவர்பிளேவுக்கு பிறகும் பேட்டை சுழற்றிய அபிஷேக் இந்தப் பருவத்தின் மூன்றாவது அரை சதத்தை 21 பந்துகளில் எட்டினார். 10 ஓவர்களில் 129 ரன்களை எட்டியது சன்ரைசர்ஸ். 28 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா ஷஷாங்க் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தவுடன் பஞ்சாபை ஆதிக்கம் செலுத்தவிடாமல் நிதிஷ் குமாரும், ஹெயின்ரிக் கிளாஸெனும் அதிரடி காட்டினார்கள். இந்த இணை 23 பந்துகளில் 47 ரன்கள் விளாசியது. இதனால், கடைசி 6 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. நிதிஷ் குமார் 25 பந்துகளில் 37 ரன்களுக்கு ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

சன்ரைசர்ஸ் இதை எளிதில் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் வீரர்கள் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால், ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. இடையில் ஹர்பிரீத் பிரார் பந்தில் கிளாஸெனும் 42 ரன்களுக்கு போல்டானார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார் சன்வீர் சிங்.

19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் விளாசிய சன்ரைசர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 17 புள்ளிகளை அடைந்து புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும், தோல்வியடையும் பட்சத்தில் சன்ரைசர்ஸ் இரண்டாவது இடத்தைத் தக்கவைக்கும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in