கடைசி ஓவரில் பஞ்சாப் 26 ரன்கள் விளாசியும் வீண்: ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி!

27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா இணை, முன்கூட்டியே களமிறங்கியிருந்தால், பஞ்சாபுக்கு மீண்டும் ஓர் அதிரடியான வெற்றியைப் பெற்று தந்திருப்பார்கள்.
கடைசி ஓவரில் பஞ்சாப் 26 ரன்கள் விளாசியும் வீண்: ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் 23-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலிரண்டு ஓவர்களில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவை வழக்கமான அதிரடிக்கு அனுமதிக்கவில்லை. ரபாடா வீசிய 3-வது ஓவரில்தான் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே ஹெட் மற்றும் மார்க்ரமை வீழ்த்தி அசத்தினார் அர்ஷ்தீப் சிங்.

விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் துணிச்சலுடன் சிக்ஸர், பவுண்டரி அடித்த அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கு சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் சன்ரைசர்ஸ் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்தது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ஹெட்டுக்குப் பதில் இம்பாக்ட் வீரராக ராகுல் திரிபாதி களமிறக்கப்பட்டார். திரிபாதி விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடினாலும், 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்தது.

இந்த விக்கெட்டுக்கு பிறகு 20 வயதுடைய நிதிஷ் குமார் ரெட்டி அதிரடிக்கு மாறினார். ஓவருக்கு ஒரு சிக்ஸர் அல்லது பவுண்டரி அடித்து விளையாடினார். சன்ரைசர்ஸ் ரன் ரேட் ஓவருக்கு 7.5-ஐ தாண்டியது. 13-வது ஓவரில் சன்ரைசர்ஸ் 100 ரன்களை எட்டியது.

கடைசி 7 ஓவர்களில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிளாஸென் 9 ரன்களுக்கு ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, நிதிஷுடன் மற்றொரு இளம் வீரர் அப்துல் சமத் இணைந்தார். இந்தக் கூட்டணி கடைசிக் கட்ட ஓவர்களில் விளையாடுவதுபோல சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசி மிரட்டினார்கள். நிதிஷ் 32 பந்துகளில் முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்தார். இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு வெறும் 19 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

இதனால் அர்ஷ்தீப் மீண்டும் அழைக்கப்பட்டார். இந்த முறையும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அப்துல் சமத் 12 பந்துகளில் 25 ரன்களும், நிதிஷ் குமார் 37 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்கள்.

19-வது ஓவரில் ஷாபாஸ் அஹமது சிக்ஸர், பவுண்டரி அடித்ததால் 15 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரை சாம் கரன் சிறப்பாக வீசினாலும், கடைசிப் பந்தில் களமிறங்கிய உனாட்கட் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை நேர்மறையாக நிறைவு செய்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ்.

183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாபுக்கு தொடக்கம் மிக மோசமானதாக அமைந்தது. முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் மெய்டனாக வீசினார். இந்த ஆட்டத்தில் 2-வது ஓவரிலேயே பந்துவீச வந்த கம்மின்ஸ் பேர்ஸ்டோவை டக் அவுட்டாக்கினார்.

மூன்றாவது ஓவரில் பிரப்சிம்ரனும், 5-வது ஓவரில் ஷிகர் தவனும் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்கள். பவர்பிளே முடிவில் பஞ்சாப் 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்தது.

சாம் கரனும், சிகந்தர் ராசாவும் பவர்பிளேவுக்கு பிறகு சற்று அதிரடி காட்டி, பஞ்சாப் பக்கம் ஆட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார்கள். பெரிய இன்னிங்ஸாக விளையாடாமல் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சாம் கரன்.

கடந்த ஆட்டத்தில் நட்சத்திரமாய் ஜொலித்த ஷஷாங்க் சிங் களமிறங்கினார். இவர் தொடக்கத்தில் நேரம் எடுத்துக்கொள்ள, ராசா அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். இருந்தபோதிலும், பஞ்சாபால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டில் விளையாட முடியவில்லை. கடைசி 7 ஓவர்களில் 92 ரன்கள் என்ற நிலை உருவானது. ராசாவும் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மாவுக்கும் பவுண்டரிகள் சிக்கவில்லை. இதனால், கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டன. ஜிதேஷ் சர்மா 16-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா மீண்டும் பஞ்சாபை வெற்றி பெறச் செய்ய வைக்கக் கடுமையாகப் போராடினார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய 17-வது ஓவரில் ஷஷாங்க் சிங் 3 பவுண்டரிகள் விளாச 17 ரன்கள் கிடைத்தன. கம்மின்ஸ் ஓவரில் அஷுதோஷ் சர்மாவும் இரு பவுண்டரிகள் அடித்து கம்மின்ஸை கலங்கடித்தார். நடராஜன் வீசிய 19-வது ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தாலும் , மற்ற பந்துகளை நடராஜன் சிறப்பாகவே வீசினார். இதனால், பஞ்சாபுக்கு 10 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன. ரிங்கு சிங் நினைவுக்கு வரலாம். ஆனால், இன்றைய ஆட்டத்தில் களத்தில் இருந்தது ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா.

உனாட்கட் வீசிய முதல் பந்தை அஷுதோஷ் சிக்ஸருக்கு அனுப்பினார். பவுண்டரி எல்லையில் நிதிஷ் கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டதால், இது சிக்ஸராக மாறியது. அடுத்து இரு வைட் பந்துகள். மீண்டும் ஒரு சிக்ஸர். இந்த முறை பவுண்டரி எல்லையில் கேட்சை தவறவிட்டு சிக்ஸர் விட்டது அப்துல் சமத்.

அடுத்த இரு பந்துகளில் தலா 2 ரன்கள் எடுத்தார்கள். ஒரு வைடும் வீசினார் உனாட்கட்.

இதனால், கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், 5-வது பந்தில் அஷுதோஷால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசிப் பந்தில் 9 ரன்கள் தேவைப்பட, ஸ்டிரைக்குக்கு சென்ற ஷஷாங் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் விளாசிய போதும் பஞ்சாபால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 46 ரன்களும், அஷுதோஷ் 15 பந்துகளில் 33 ரன்களும் விளாசினார்கள். இந்த இணை 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தது. கொஞ்சம் முன்னாடி களமிறங்கியிருந்தால், பஞ்சாபுக்கு மீண்டும் ஓர் அதிரடியான வெற்றியைப் பெற்று தந்திருப்பார்கள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றதன் மூலம் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in