அசத்திய சன்ரைசர்ஸ்: சிஎஸ்கேவுக்கு 2-வது தோல்வி!

4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துத் தந்தார் அபிஷேக் சர்மா.
சிஎஸ்கேவுக்கு 2-வது தோல்வி!
சிஎஸ்கேவுக்கு 2-வது தோல்வி!ANI

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணிகள் ஹைதராபாதில் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் அதிகம் எதிர்பார்த்த ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள் அடித்து 9 பந்துகளில் 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கெயிக்வாட், ரஹானே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ஓவருக்கு 8 ரன்கள் என்ற கணக்கில் விளையாடிக் கொண்டிருந்த இந்த கூட்டணியை ஷாபாஸ் அஹமது பிரித்தார்.

கெயிக்வாட் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய துபே, வழக்கம் போல் வந்தவுடன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஹானே - துபே ஜோடி 65 ரன்கள் சேர்தது.

துபே 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ரஹானே 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் சிஎஸ்கே அணியால் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த முடியவில்லை.

குறிப்பாக கடைசி 7 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை. மெதுவான பந்துகளை வீசி ஹைதராபாத் அணி நெருக்கடி அளித்தது. ஜடேஜா 4 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துத் தந்தார் அபிஷேக் சர்மா. முகேஷ் செளத்ரியின் ஒரே ஓவரில் 27 ரன்கள் எடுக்கப்பட்டன. 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க, ஹெட் மற்றும் மார்க்ரம் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தனர். இந்த கூட்டணியை தீக்‌ஷனா பிரித்தார். ஹெட் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்ரம் அரை சதம் அடித்தார். சிஎஸ்கே அணி ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, மொயீன் அலி மற்றும் தீக்‌ஷனா என 4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி ஹைதராபாத் அணியைக் கொஞ்சம் தடுமாற வைத்தது.

மார்க்ரம் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஷாபாஸ் அஹமது 18 ரன்களில் வெளியேறினார். இவர்களது விக்கெட்டை மொயீன் அலி வீழ்த்தினார்.

கிளாஸன் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆட்டத்தை எளிதில் முடித்தனர். 18.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 2-வது ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in