பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி செப். 8 அன்று நிறைவடைந்தது.
இந்தியா சார்பாக 12 வகையிலான விளையாட்டுகளில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்தது.
இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்ற பாராலிம்பிக் போட்டியாக இது அமைந்தது.
முன்னதாக, 2020 பாராலிம்பிக்ஸில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது. எனவே அந்த சாதனையை இந்த பாராலிம்பிக்ஸில் முறியடித்தது இந்தியா.
இந்நிலையில் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றவர்களுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 75 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 30 லட்சமும், கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 22.50 லட்சமும் வழங்கப்படும் என மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், “பாராலிம்பிக்ஸில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. 2016-ல் 4 பதக்கங்களையும், 2020-ல் 19 பதக்கங்களையும் வென்ற இந்தியா, தற்போது 29 பதக்கங்களை வென்று 18-வது இடத்தைப் பிடித்தது. நமது வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், இதன் மூலம் 2028-ல் நடைபெறும் பாராலிம்பிக்ஸில் இந்தியாவால் அதிகமானப் பதக்கங்களை வெல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.