
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தெ.ஆ. அணி டபிள்யுடிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் தெ.ஆ. அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற் இத்தொடரை 2-0 என வென்றது.
இதன் மூலம் டபிள்யுடிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி டபிள்யுடிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது. இன்று இலங்கை அணியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது தெ.ஆ. அணி.
இந்திய அணி 61.11 முதல் 57.29 புள்ளிகள் சதவீதத்துக்கு சரிந்து, புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
பிஜிடி தொடரில் மீதமுள்ள மூன்று டெஸ்டில், ஒன்றில் தோல்வியைச் சந்தித்தாலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவது சிக்கலாகிவிடும்.
மற்ற அணிகளின் முடிவைச் சாராமல் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற இந்திய அணி இனி வரும் மூன்று டெஸ்டிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
தெ.ஆ. அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் ஒன்றில் வெற்றி பெற்றாலே தெ.ஆ. அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துவிடும்.