ஆப்கானிஸ்தானை நொறுக்கி முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் இதுவரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்கிற விமர்சனத்தை உடைத்தது தென்னாப்பிரிக்க அணி.
ஆப்கானிஸ்தானை நொறுக்கி முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!
ஆப்கானிஸ்தானை நொறுக்கி முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!@icc

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் டிரினிடாட் & டொபாகோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. நடப்பு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவரான குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதைத் தொடர்ந்து யான்சென், ரபாடா, நார்க்கியா, ஷம்சி ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் திணறியது ஆப்கானிஸ்தான் அணி.

குல்புதின் நைப் 9, ஸத்ரான் 2, நபி 0, ஓமர்ஸாய் 10, ஜனத் 8, ரஷித் கான் 8 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. யான்சென், ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா, நார்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் டி20 வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது. மேலும், டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது. டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஒரு அணி 100 ரன்களுக்கு கீழ் அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பது இதுவே முதல்முறையாகும்.

இதன் பிறகு 57 என்ற எளிதான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. வழக்கம்போல் ஆரம்பத்திலேயே விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கை அளித்தார் ஃபரூக்கி. டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு மார்க்ரம் - ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி 8.5 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தனர். ஹென்ட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 29 ரன்களும், மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது தென்னாப்பிரிக்க அணி. மேலும், ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் இதுவரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்கிற விமர்சனத்தை உடைத்தது தென்னாப்பிரிக்க அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in