
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் தெ.ஆ. அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் முழுமையாக வென்றுள்ளது.
இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் தெ.ஆ. அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் கடந்த டிச. 5 அன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைல் வெரைன் ஆட்டமிழக்காமல் 105 ரன்களும், ரையன் ரிக்கெல்டன் 101 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பிறகு, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 328 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 89 ரன்கள் எடுத்தார். தெ.ஆ. அணி தரப்பில் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் பிறகு 2-வது இன்னிங்ஸில் தெ.ஆ. அணி 317 ரன்கள் எடுத்தது. பவுமா 66 ரன்கள் எடுத்தார். பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
348 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.
கடைசி நாளில் இலங்கை அணி வெற்றிக்கு 143 ரன்கள் தேவைப்பட்டது. தெ.ஆ. அணிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்பட்டது.
5-வது நாளில் இலங்கை அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் தனஞ்ஜெயா டி சில்வா 50 ரன்கள் எடுத்தார். கேஷவ் மஹாராஜ் அசத்தலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்த டெஸ்டில் தெ.ஆ. அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என முழுமையாக வென்றுள்ளது.
மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.