
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20-யில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 ஆட்டம் கபேர்ஹாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்திய சாம்சன் முதல் ஓவரின் 3-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதன் பிறகு அபிஷேக் சர்மா மற்றும் சூர்யாகுமார் யாதவ் ஆகியோர் தலா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் தொடர்ச்சியாக திலக் வர்மா - அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்து ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்தனர். திலக் வர்மா 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து அக்ஷர் படேல் எதிர்பாராத வகையில் ரன் அவுட் ஆனார்.
12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் பிறகு அதிகம் எதிர்பார்த்த ரிங்கு சிங்கும் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஹார்திக் பாண்டியா பொறுமையாக விளையாடினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியதால், ஹார்திக்கிடம் அதிரடியான ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. ஹார்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.
தெ.ஆ. அணி தரப்பில் ஜெரால்ட் கோட்சியா, யான்சென், சிமிலானே, மார்க்ரம் மற்றும் பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய தெ.ஆ. அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. ரிக்கல்டன் 13 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேற, மார்க்ரம் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸை அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார் வருண் சக்ரவர்த்தி. ஓரளவுக்கு அதிரடியாக விளையாடிய ஹென்ட்ரிக்ஸ் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் தெ.ஆ. அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. கிளாசன், மில்லர் ஆகியோருக்கு முன்னதாக யான்சென் களமிறங்கி 7 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிளாசனை 2 ரன்களிலும், மில்லரை ரன் எதுவும் எடுக்காத நிலையிலும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார் வருண் சக்ரவர்த்தி. டி20-யில், வருண் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
இதன் பிறகு ஸ்டப்ஸ் மற்றும் கோட்சியா கூட்டணி அமைத்து தெ.ஆ. அணிக்கு நம்பிக்கை அளித்தனர். இருவரும் பவுண்டரிகளை விரட்டி வேகமாக ரன்களை சேர்த்தனர்.
முடிவில், ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தெ.ஆ. அணி.
ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், கோட்சியா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 9 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர். வருண் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்கத்தில் வருணின் சுழலில் வீழ்ந்தாலும், ஸ்டப்ஸ் மற்றும் கோட்சியா கூட்டணியில் மீண்டெழுந்தது தெ.ஆ. அணி.
இந்த வெற்றியின் மூலம் இத்தொடரை 1-1 என சமன் செய்துள்ளது தெ.ஆ. அணி. 3-வது டி20 நவ. 13 அன்று நடைபெறுகிறது.