மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தெ.ஆ. அணி.
மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள், நியூசிலாந்து, தெ.ஆ. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெத் மூனி 44 ரன்களும், எலிஸ் பெரி 31 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய தெ.ஆ. அணி பாஷ் மற்றும் வோல்வார்ட்டின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் வோல்வார்ட் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். பாஷ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் தெ.ஆ. அணி 16 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
2009-ல் முதல்முறையாக நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. இதன் பிறகு நடைபெற்ற 7 டி20 உலகக் கோப்பையில் 6 முறை கோப்பையை வென்று, ஒருமுறை 2-வது இடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலிய அணி. எனவே 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
தெ.ஆ அணி, கடந்த டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது 2-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் மே.இ. தீவுகள், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிச் சுற்று அக்.20 அன்று நடைபெறவுள்ளது.