414 ரன்கள் குவித்த இங்கிலாந்து: தென்னாப்பிரிக்காவை 72 ரன்களுக்கு சுருட்டி சாதனை! | England Cricket |

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் (342) வெற்றி பெற்ற அணி என்ற சாதனையைப் படைத்தது இங்கிலாந்து.
414 ரன்கள் குவித்த இங்கிலாந்து: தென்னாப்பிரிக்காவை 72 ரன்களுக்கு சுருட்டி சாதனை! | England Cricket |
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 414 ரன்கள் குவித்த இங்கிலாந்து, 342 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதலிரு ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் சௌதாம்ப்டனில் செப்டம்பர் 7 அன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்துக்கு தொடக்க பேட்டர் ஜேமி ஸ்மித் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். நடுவரிசையில் ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் சதமடித்து மிரட்டினார்கள். 21 வயதில் சதமடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காகக் குறைந்த வயதில் சதமடித்தவர்களில் டேவிட் கோவெருக்கு அடுத்த இடத்தில் உள்ளார் பெத்தெல்.

ரூட் 100 ரன்களுக்கும் பெத்தெல் 110 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். ஜாஸ் பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 62 ரன்கள் விளாசி அதிரடியான ஃபினிஷிங்கை கொடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 414 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 7-வது முறையாக 400 ரன்களைக் கடந்தாலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 400 ரன்களைக் கடப்பது இதுவே முதன்முறை.

தென்னாப்பிரிக்க பேட்டர்களால் ஜோஃப்ரா ஆர்ச்சர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார்கள். பெரிய இலக்கு என்பது கூடுதல் நெருக்கடியாக இருந்ததால், அந்த அணி 72 ரன்களுக்கு சுருண்டது. 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் (342) வெற்றி பெற்ற அணி என்ற சாதனையைப் படைத்தது இங்கிலாந்து. முன்னதாக, 2023-ல் இலங்கைக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருந்ததே சாதனையாக இருந்தது.

தென்னாப்பிரிக்க அணி இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு வாரங்களுக்கு முன் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்ததே, அந்த அணியின் மிகப் பெரிய தோல்வியாக இருந்தது.

72 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது தென்னாப்பிரிக்கா. 1993-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே தென்னாப்பிரிக்காவின் குறைந்தபட்ச ஸ்கோர்.

England Cricket | South Africa | Eng v SA | Eng vs SA | Jacob Bethell | Joe Root | Jos Buttler | Jamie Smith | Jofra Archer | ODI |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in